ஜார்க்கண்ட் அமைச்சரை அதிரடியாக கைது செய்த ED.. எதிர்க்கட்சிகளுக்கு தொடர் நெருக்கடி!
மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் அமலாக்கத்துறையால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது.
ஜார்க்கண்ட் அமைச்சரை சுத்து போட்ட ED:
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மேலே குறிப்பிட்டவர்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டுமே இடைக்கால பிணை கிடைத்தது. மற்ற அனைவரும் சிறையில் உள்ளனர். மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஆலம்கிர் ஆலமை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆலமின் தனிச் செயலாளருக்கு தொடர்புடைய குடியிருப்பு வளாகத்தில் இருந்து 35 கோடிக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றியது தொடர்பான பணமோசடி வழக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எதிர்க்கட்சிகளுக்கு தொடர் நெருக்கடி:
ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆலமிடம் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியும், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஆலமின் தனிச் செயலாளர் சஞ்சீவ் லால். இவரது, வீட்டு உதவியாளரான ஜஹாங்கிர் ஆலம் ராஞ்சியில் உள்ள 2BHK அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டில், கடந்த வாரம் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அங்கிருந்து 35.23 கோடி ரூபாயும் அவருக்கு தொடர்புடைய மற்ற இடங்களில் இருந்து 1.5 கோடி ரூபாயும் பறிமுதல் செய்தது. மொத்தம் 37 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அமைச்சரின் தனிச் செயலாளர் சஞ்சீவ் லால் மற்றும் ஜஹாங்கீர் ஆலம் ஆகியோர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கைது செய்யப்பட்டு தற்போது அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் டெண்டர் ஊழல் தொடர்பான வழக்கில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சஞ்சீவ் லாலின் மேற்பார்வையின் கீழ்தான் கமிஷன் பெறப்பட்டு பணம் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்டில் காங்கிரஸ் முகமாக இருந்து வரும் ஆலம்கிர் ஆலம், ஜார்க்கண்ட் சட்டமன்றத்திற்கு முதல்முறையாக 2000ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையும் படிக்க: Fact Check: இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தமா? உ.பி.யில் நடந்தது என்ன?