Naresh Goyal : ரூ.538 கோடி கடன் மோசடி வழக்கு.. நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல்.. நடந்தது என்ன?
ஒரு காலத்தில் சிவில் விமான போக்குவரத்தில் கொடி கட்டி பறந்த நரேஷ் கோயல் சிறைக்கு செல்ல காரணமான வழக்கு பற்றி கீழே காண்போம்.
கனரா வங்கியிடம் 538 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அதன் நிறுவனர் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவு கைது செய்தனர்.
அமலாக்கத்துறை காவல் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றத்தின் முன் நரேஷ் கோயல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற காவல் கேட்டு சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் 14 நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட நரேஷ் கோயல்:
இதை தொடர்ந்து, 74 வயதான நரேஷ் கோயல், ஆர்தர் ரோடு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, குடும்ப மருத்துவர், வழக்கமான மருத்துவ ஆலோசகர், சிறப்பு மருத்துவர் ஆகியோரை தினமும் மருத்துவப் பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் நரேஷ் கோயல் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 13ஆம் தேதி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக ஜேஜே மருத்துவமனைக்கு தான் கொண்டு செல்லப்பட்டதாகவும் பரிசோதனைக்கு பிறகு, இதயத் துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாகவும் மனுவில் நரேஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கடந்த காலங்களில் இதய நோய் மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதை கருத்தில் கொண்டு, 74 வயதான நரேஷ் கோயலுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்த நரேஷ் கோயல்:
அதுமட்டுமின்றி, தனது இடது பிரதான தமனியில் 80% அடைப்பு இருப்பதாகவும், மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால், தனக்கு வழக்கமான மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் நரேஷ் கோயல், மனுவில் கூறியுள்ளார். தனது மனைவி புற்றுநோயால் அவதிப்படுவதால் தனது குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவோ அல்லது தினமும் ஒரு மணி நேரம் அவர்களிடம் தொலைபேசியில் பேச அனுமதிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது மனுக்களுக்கு திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்குமாறு சிறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், வீட்டில் சமைத்த உணவை சாப்பிடவும் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
ஒரு காலத்தில் சிவில் விமான போக்குவரத்தில் கொடி கட்டி பறந்த நரேஷ் கோயல் சிறைக்கு செல்ல காரணமான வழக்கு பற்றி கீழே காண்போம்.
கடந்த 2011-12 மற்றும் 2018-19க்கு இடைப்பட்ட காலத்தில், விமான இயக்க செலவினங்களைச் சமாளிப்பதற்காக 10 வங்கிகளிடமிருந்து ஜெட் ஏர்வேஸ் கடன் பெற்றது. இருப்பினும், வாங்கிய மொத்த கடனில் 6,000 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
கன்சல்டன்சி மற்றும் தொழில்முறைக் கட்டணங்கள் என்ற போர்வையில் 1,152 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. சகோதர நிறுவனமான ஜெட் லைட் லிமிடெடின் (ஜேஎல்எல்) கடனை அடைப்பதற்காக 2,547.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டது தணிக்கையில் தெரியவந்துள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.