"ராணுவம் இப்படி செய்யும்னு நம்பல" காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவியின் சகோதரர் உருக்கம்
விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
கடந்த 25ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பழங்குடியின குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகள்:
ஆனால், ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
முகமது சபீர், ஷபீர் அகமது மற்றும் ஷோகத் ஹுசைன் ஆகியோர் உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டது. இதற்கு மத்தியில், ராணுவ முகாமில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
அதில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது ராணுவ வீரர்கள் என்று நம்பப்படும் சில நபர்கள், மிளகாய் தூள், தூவுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ, பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. பழங்குடியினரின் மர்ம மரணம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், ராணுவத்தினரின் கஸ்டடியில் இருந்தபோது உயிரிழந்த ஷபீர் அகமதின் சகோதரர் நூர் அகமது உருக்கமாக பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "உடலைப் பார்க்கும் வரை எனது சகோதரர் இறந்துவிட்டார் என வெளியான செய்திகளை என்னால் நம்ப முடியவில்லை.
"ராணுவம் இப்படிச் செய்யும் என்று நம்ப முடியவில்லை"
அவரின் உடலில் சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் இருப்பதை கண்டேன். அவருடைய உடலைப் பார்க்கும் வரை நம்பவில்லை. ராணுவம் இப்படிச் செய்யும் என்று நம்ப முடியவில்லை. விசாரணைக்காக அழைத்துச் சென்று சித்திரவதை செய்யப்பட்டவர்கள் அப்பாவி மக்கள் என பாதுகாப்பு அமைச்சர் எங்களிடம் கூறினார். உயிருக்கு இழப்பீடு வழங்க முடியாது. ஆனால், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்" என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ள ராணுவம், குற்றம்சாட்டப்பட்ட படைப்பிரிவின் தளபதியையும் மற்ற மூன்று அதிகாரிகளையும் பதவியில் இருந்து தூக்கியுள்ளது.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கடந்த புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "நீங்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மக்களின் மனதை வெல்லும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. நாட்டின் குடிமக்களை எந்த நேரத்திலும் புண்படுத்தக் கூடாது.
ராணுவத்தினர் மக்களுடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எத்தனை போரிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு, வெற்றியடையும் திறன் நம்மிடம் உள்ளது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை தாண்டி, மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. அரசு உங்களுடன் உள்ளது" என்றார்.