Jagadguru Paramhans Acharya: இந்து ராஷ்ட்ரான்னு அறிவிக்கணும், இல்லனா.. மத்திய அரசிடம் தற்கொலை மிரட்டல் விடும் உபி சாமியார்!
இந்தியாவை 'இந்து ராஷ்ட்ரா' என அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் ஆற்றில் இறங்கி உயிரை விடுவேன் என வட இந்திய சாமியார் மிரட்டல் விடுத்துள்ளார்
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் மந்திரம். பல மாநிலங்கள், பல மொழிகள், பல மதங்கள் இருந்தாலும் இந்தியா என்ற ஒற்றை வார்த்தையிலேயே நம் நாடு ஆரோக்கியமாக இயங்கி வருகிறது. ஆனாலும் அவ்வப்போது நடக்கும் பல சம்பவங்களும், மத ரீதியிலான சண்டைகளும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதையே கேள்விக்குள்ளாக்குகின்றது. அப்படியான ஒரு கோரிக்கையை வட இந்திய சாமியார் ஒருவர் தற்கொலை மிரட்டலாக விடுத்துள்ளார். அயோத்தியைச் சேர்ந்த சத்குரு பரகன்ஸ் ஆச்சார்ய மகாராஜ் என்ற உபி சாமியார் மத்திய அரசுக்கு ஒரு தற்கொலை மிரட்டலை விடுத்துள்ளார். அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் இந்தியாவை ’இந்து ராஷ்ட்ரா’என அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் சராயு ஆற்றில் இறங்கி நீரில் மூழ்கி உயிரிழப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள முஸ்லீம், கிறிஸ்துவ மதத்தை முடிவு கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசியுள்ள அவர், ''நான் இந்திய அரசை வலியுறுத்துகிறேன். அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ’இந்து ராஷ்ட்ரா' என அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆற்றில் இறங்கி உயிரிழப்பேன் என்றார்
பல்வேறு சிக்கலுக்கு இடையே தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மிக விரைவாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் அடுத்த வருடம் நடக்கவுள்ள தேர்தலில் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றன.
முன்னதாக, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் குஜராத் சென்ற போது இந்துத்துவா குறித்து, இந்து நாடு குறித்தும் பேசினார். அதில்,'' இந்துத்துவா என்பது அனைவரையும் ஒன்று சேர்க்கிறது. அனைவரையும் அரவணைத்து செழிக்க வைக்கிறது. நாம் சில தடைகளை நீக்க நமக்கு அதிகாரம் வேண்டும். அது தான் உலக வழக்கம். அதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சில தடைகளை நீக்கும்போது மோதல் ஏற்படலாம். ஆனால் இந்துத்துவா மோதலை பற்றியதல்ல. நாம் அதிகாரம் வாய்ந்தவர்களாக மாற வேண்டும். அந்த அதிகாரம் மதத்தை பாதுகாக்கவே தவிர, நேர்மையற்ற விஷயங்களுக்கு அந்த அதிகாரம் பயன்படுத்தப்பட மாட்டாது என்றார்.
இந்துத்துவா, இந்து நாடு கருத்துகளுக்கு இணையத்தில் பலரும் கண்டனங்களையும், எதிர்க்கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் அழகே வேற்றுமையில் ஒற்றுமை என்பதே. அதனை அரசியல் கட்சிகளும், தனிப்பட்ட சிலரும் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்
Ayodhya | I demand that India should be declared a ‘Hindu Rashtra’ by Oct 2 or else I'll take Jal Samadhi in river Sarayu. And Centre should terminate nationality of Muslims & Christians: Jagadguru Paramhans Acharya Maharaj (28.09) pic.twitter.com/QMAIkd6tLZ
— ANI UP (@ANINewsUP) September 29, 2021