Reservation: இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து; தேர்தலுக்கு முதல் நாள் வரை அமல்படுத்தக் கூடாது - உச்சநீதிமன்றம் அதிரடி..!
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9ஆம் தேதி வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Reservation: கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9ஆம் தேதி வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி, அந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அந்த இட ஒதுக்கீட்டை அந்த மாநிலத்தில் உள்ள செல்வாக்கு மிக்க சாதி பிரிவுகளான வொக்கலிக்கா, லிங்காயத்து சமுதாயத்தினருக்கு வழங்கியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது கர்நாடகாவில் பெரும் கலவரமே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
கர்நாடகா அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்த செய்ததை அமல்படுத்த தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசம் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மே 9-ஆம் தேதி வரை இந்த வழக்கை ஒத்திவைப்பதாகவும், அதுவரையில் கர்நாடக அரசின் முடிவை அமல்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், இடஒதுக்கீடு தொடர்பான எந்த முடிவையும் மே 9-ஆம் தேதி மாநில அரசு எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு கர்நாடக அரசும் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் எந்தவித நியமனங்களும் மேற்கொள்ளப்படாது என்று உறுதி அளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இத்தகையை உத்தரவு வந்திருப்பது பாஜகவுக்கு தேர்தலில் எத்தகையை விளைவைக் கொடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையில், நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்தது சரியே என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கர்நாடகாவில் 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்கு அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.