Aditya L1: நான்கு மாத பயணம்.. இன்று லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா எல்.1 விண்கலம்..
ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று மாலை லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தரப்பில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் இன்று மாலை 4 மணியளவில் லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I'm set to arrive at my cosmic destination, Lagrange Point 1 (L1), on Jan 6, 2024! #ISRO pic.twitter.com/4FnZKwg27q
— ISRO ADITYA-L1 (@ISRO_ADITYAL1) December 22, 2023
சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்றுவட்டபாதைகள் படிப்படியாக உயரத்தப்பட்டன. செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது.
சுமார் 4 மாத பயணத்தை முடித்து இன்று மாலை 4 மணி அளவில் ஆதித்யா எல்.1 விண்கலம் அதன் இறுதி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பேசிய இஸ்ரோ விஞ்ஞானி, “ ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று மாலை 4 மணியளவில், அதன் சுற்றுப்பாதையான லெக்ராஞ்சியன் புள்ளி 1 – இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளி பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ளது. இந்த புள்ளியில் எந்த கிரகணமும் (சந்திர கிரகணம், சூரிய கிரகணம்) குறுக்கே வராத காரணத்தால் எந்த இடையூறும் இல்லாமல் விண்கலம் அதன் பணியை மேற்கொள்ளும்” என கூறியுள்ளார்.
சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் ஆதித்யா எல்1 –ல் உள்ளன.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. அதேபோல் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி, விண்கலத்தில் இருக்கும், சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி செயல்படத் தொடங்கியது. ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியில் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் மாறுபாடுகளை ஹிஸ்டொகிராம் விளக்கியது. இப்படி சூரியனை நோக்கிய தனது பயணத்தில் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆரோக்கியமாக நாள் 1 முதல் செயல்பட்டு வருகிறது.