சாதி பெயரை துறந்த டாப்பர்.. 400க்கு 400 மதிப்பெண்கள் வாங்கிய மாணவி சொன்ன காரணம்
இந்தாண்டு நடந்த ஐஎஸ்சி (ISC) தேர்வில் 400க்கு 400 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்த கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீஜனி, தனது சாதி பெயரை துறந்து சமூக மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார். இதற்காக சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.

ஐஎஸ்சி (ISC) தேர்வில் 400க்கு 400 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்த 12ஆம் வகுப்பு மாணவி, தனது சாதி பெயரை துறந்து சமூக மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார். மேற்குவங்கம் கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீஜனி பேசும் சமூகநீதி அனைவரையும் வியக்க வைக்கிறது. சாதி, மதம், இனம் மற்றும் பாலின ஒடுக்கமுறைகளில் இருந்து சமூகம் விடுதலை பெற வேண்டும் என்ற காரணத்தினால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார் ஸ்ரீஜனி.
சாதி பெயரை துறந்த டாப்பர்:
இந்தியாவில் பல மாநிலங்களில் தங்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி பெயர் போட்டு கொள்ளும் வழக்கம் உண்டு. இதில், தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கு. கம்யூனிஸ்டுகளின் தாக்கம் அதிகம் உள்ள மேற்குவங்கம், கேரளாவில் கூட புரட்சி பேசும் இடதுசாரிகள் உள்பட பெரும்பாலான மக்கள், தங்களின் பெயர்களுக்கு பின்னால் சாதி பெயர் வைத்து கொள்கின்றனர்.
இப்படியான, சமூக இறுக்கத்திற்கு மத்தியில் சமூகநீதி பேசி வியப்பளிக்கிறார் 17 வயது மாணவி ஸ்ரீஜனி. சாதி, மதம், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர், இந்தாண்டு ஐஎஸ்சி (ISC) தேர்வில் 400க்கு 400 மதிப்பெண்கள் வாங்கி சாதனை படைத்துள்ளார்.
பள்ளி கொடுத்த சிறப்பு அனுமதி:
தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஃபியூச்சர் பவுண்டேஷன் பள்ளியில் படித்து உச்சத்தை தொட்டுள்ள ஸ்ரீஜனி, தான் பின்பற்றும் ஒரே மதம் மனிதநேயம்தான் என கூறுகிறார். சமூக மாற்றத்திற்கான அவரது முயற்சிகள் அதோடு நின்றுவிடவில்லை. 12ஆம் வகுப்பு தேர்வுக்கு முன்பே, தேர்வுக்கான பதிவு விண்ணப்பத்தில் சாதி பெயரை விடுத்து தனது பெயரை மட்டுமே போட்டு கொள்ள சிறப்பு அனுமதி கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது பள்ளி முதல்வர் ரஞ்சன் மிட்டர் கூறுகையில், "சட்டம் அனுமதிக்கும் வரை, இது எங்களுக்கு ஒரு பிரச்னை அல்ல. இது கட்டாயமும் அல்ல. ஒவ்வொரு நபரும் தங்கள் சுயமரியாதையுடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். மேலும் குடும்பம் விரும்பியதால், நாங்கள் அதற்கு அனுமதி அளித்தோம்" என்றார்.
தேர்வுக்கு தயாராகி வந்த போதே செய்த போராட்டம்:
சாதி பெயரை துறக்கும் தன்னுடைய முடிவு குறித்து விளக்கிய ஸ்ரீஜனி, "ஒரு தனிநபராக, இது என்னுடைய முடிவு. எனது பெற்றோர் மற்றும் சகோதரியின் ஆதரவும் இருந்தது. சாதி, பாலினம் மற்றும் மதப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட, பொருளாதார அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட ஒரு சமூகத்தை நான் நம்புகிறேன்.
எனக்கு, சாதிப்பெயர் ஒரு பொருட்டல்ல. என் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு நான் எப்போதும் எனது முதல் பெயராலேயே அறியப்பட்டிருக்கிறேன். குடும்பப்பெயரின் சுமையை ஏன் சுமக்க வேண்டும்? என் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெற்றிருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" என்றார்.
தேர்வுக்காக தயாராகி வந்த இக்கட்டான சூழலில் கூட, அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் மாணவி ஸ்ரீஜனி. கொல்கத்தா பயற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் தன்னுடைய தாயாருடன் கலந்து கொண்டு குரல் கொடுத்துள்ளார் ஸ்ரீஜனி.
"ஆணாதிக்கத்தில் இருந்து விடுதலை"
ஸ்ரீஜனியின் சாதனை மட்டும் இன்றி அவரது கொள்கைகளை நினைத்தும் பெருமைப்படுகின்றனர் அவரது பெற்றோர். அவரது தந்தை தேபாஷிஸ் கோஸ்வாமி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளார். புகழ்பெற்ற சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர். அவரது தாயார் கோபா, குருதாஸ் கல்லூரியின் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
"என் இரண்டு மகள்களும், அவர்கள் பிறந்ததிலிருந்தே நாங்கள் சொல்லி கொடுத்த பண்புகள் மற்றும் நம்பிக்கைகளை நிலைநிறுத்துகிறார்கள். நான் என் கணவரின் குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதில்லை. எங்கள் மகள்களின் பிறப்புச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தபோது, நாங்கள் எந்த குடும்பப் பெயரையும் சேர்க்கவில்லை. ஆணாதிக்கம் மற்றும் பேரினவாதத்தில் இருந்து நமது சமூகம் விடுதலை பெற வேண்டும்" என கூறி ஸ்ரீஜனிக்கு உறுதுணையாக இருக்கிறார் அவரது தாயார் கோபா.




















