India's Tallest man: சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் நாட்டின் உயரமான மனிதர் தர்மேந்திர பிரதாப் சிங்
8 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட இவர், இந்தியாவின் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தககத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இந்தியாவின் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தககத்தில் அங்கீகாரம் பெற்ற தர்மேந்திர பிரதாப் சிங் சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
2022 உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி தொடங்கும் முதல்கட்ட வாக்குப்பதிவிற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டது. நாளை மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், மனுக்களை விலக்கிக் கொள்ள 27ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் அகிலேஷ் யாதவின் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் வளர்ச்சி கொள்கையில் உறுதியான நாட்டம் கொண்ட தர்மேந்திர பிரதாப் சிங் அந்த கட்சியில் இணைந்தார். 8 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட பிரதாப் சிங், இந்தியாவின் உயரமான மனிதர் என்று அறியப்படுகிறார். இவரது, வருகை கட்சியை பலப்படுத்தும் என்று சமாஜ்வாதி கட்சி தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம மாநிலம் பிரத்தாப்புகர் மாவட்டம், நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தில் வசித்து வரும் தர்மேந்திர பிரதாப் சிங் முதுகலை பட்டம் பெற்றவர். அவருக்கு வயது 46.
8 அடி 2 அங்குலம் உயரம் கொண்ட இவர், இந்தியாவின் உயரமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தககத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளார். 2013ல் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
இன்று, கட்சியில் இணைவதற்கு முன்பாகவே, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.
இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர்கள் உள்ளனர். உயரத்தை மற்றவர்கள் கொண்டாடினாலும், அது தன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதாக பலநேரங்களில் வேதனையடைந்திருக்கிறார். உயரமான தோற்றத்தைக் காரணம் காட்டி, அவரை திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை. நிறுவனங்கள் வேலை தரவில்லை.
நிலையான வாழ்வாதாரத்திற்காக, டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று மக்களுடன் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.
இதற்கிடையே, அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்கும், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பல்வேறு அரசியல் கட்சிகளும் வெளியிட்டு வருகின்றன. தனது கட்சி சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களை பகுஜன் சமாஜ் கட்சி முன்னதாக வெளியிட்டது. 55 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.