Mormugao: 7,400 டன் எடை, 163 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலத்துடன் இந்திய கடற்படையில் இணையும் பிரமாண்ட மோர்முகோவ் போர்க்கப்பல்
மும்பையில் நாளை நடைபெற உள்ள விழாவில், அதிநவீன மோர்முகாவ் போர்க்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்க உள்ளார்.
இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் தனது பணிகளை நிறைவேற்றுவதற்கான இந்திய கடற்படையின் இயக்கம், அணுகல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல் நாளை இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு அதிகரித்து வருகிற நிலையில், இது இந்திய கடற்படையின் கடல்சார் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படையில் புதிய போர்க்கப்பல்:
கடற்படையின் ப்ராஜெக்ட்-15 எனும் திட்டத்தின் கீழ் முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது போர்க்கப்பல் மோர்முகாவ். கோவாவில் உள்ள பழமையான துறைமுக நகரமான மோர்முகோவின் பெயர் தான் புதிய போர்க்கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இதே ப்ராஜெக்ட்-15 எனும் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு போர்க்கப்பல்கள் 2025க்குள் இந்திய கடற்படைக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கப்பலின் அடிப்படை விவரங்கள்:
மோர்முகோவ் கப்பல் முழுமையான கொள்ளளவில் 7,400 டன் எடையுடன் 163 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு கழகத்தால் வடிவமைக்கப்பட்ட மோர்முகோவ், மசாகான் டாக் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் சக்தி வாய்ந்த 4 எரிவாயு விசையாழிகளால் இயக்கப்படுகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கடல்மைல் ஆகும். stealth mode திறன் கொண்டதுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாக மோர்முகோவ் கருதப்படுகிறது. இதனால் எதிரிகளின் ரேடாரில் சிக்காமல் இந்த போர்க்கப்பலால் இயங்க முடியும்.
ஆயுத அம்சங்கள்:
இந்த கப்பலில், அணு ஆயுதங்கள், உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போர் நிலைமைகளில் போரிடுவதற்கு ஏற்ற வகையில் அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரேடார்கள், துப்பாக்கி இலக்கு அமைப்புகளுக்கு இலக்கு தரவுகளை வழங்கும். அதிநவீன தொலை உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதிநவீன ரேடார், தரையில் இருந்து புறப்பட்டுச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை, தரையில் இருந்து புறப்பட்டு வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட போர்த்தளவாடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பலின் நீர்மூழ்கி போர் திறன்கள், உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள ராக்கெட் லாஞ்சர்கள், டார்பிடோ லாஞ்சர்கள், ஏ.எஸ்.டபிள்யூ ஹெலிகாப்டர்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு மயமாக்கல்:
மோர்முகோவ் கப்பலின் தனிச்சிறப்பு என்னவென்றால், அதன் உற்பத்தியில் சுமார் 75 சதவிகிதம் மத்திய அரசின் ஆத்ம நிர்பர் பாரத் எனும் உள்நாட்டுமயமாக்கல் நோக்கத்தின் அடிப்படையில் தயாராகியுள்ளது. இந்த அதிநவீன நாசகார போர்க்கப்பல், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் மும்பையில் நாளை முறைப்படி இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
நாட்டின் உள்நாட்டுமயமாக்கல் மற்றும் தன்னிறைவு அடைவதில் கவனம் செலுத்தி, கட்டுமானத்தில் உள்ள கடற்படைக்கான 44 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில், 42 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களிலேயே தயாராகி வருகின்றன. அதோடு தேவைக்கு ஏற்ப 55 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவை அனைத்தும் இந்தியாவிலேயே முழுமையாக கட்டப்படும் எனவும் அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.