Indian Navy: கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்கள் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
Indian Navy: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானியர்கள் 23 பேரை, இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
Indian Navy: பாதிக்கப்பட்ட கப்பல் வெள்ளிக்கிழமை கொள்ளையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
23 பாகிஸ்தானியர்கள் மீட்பு:
மீன்பிடிக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி இருக்கலாம் என்ற தகவல் வந்த உடனேயே, இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு கப்பல்களை அரபிக்கடலில் துரத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரத்துக்கும் மேலாக கடத்தப்பட்ட கப்பலை துரத்திச் சென்று சுற்றி வளைத்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, கடத்தப்பட்ட கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் மூலம், 23 பாகிஸ்தானியர்கள் அடங்கிய மீனவர்கள் குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஈரானிய மீன்பிடிக் கப்பலான 'அல் கமர் 786' என்ற படகை தான், கொள்ளையர்கள் 9 பேர் சேர்ந்து துப்பாக்கி முனையில் கடத்த முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சோகோட்ராவின் தென்மேற்கே தோராயமாக 90 நாட்டிகல் மைல் தொலைவில் இருந்தபோது, கப்பலை கொள்ளையர்கள் கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை சிறப்புக் குழுக்கள் தற்சமயம் அந்த மீன்பிடி கப்பலின் மீட்பு மற்றும் கடல்வழிச் சோதனைகளை மேற்கொண்டு, வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்கின்றன என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndianNavy Responds to Piracy Attack in the #ArabianSea.
— SpokespersonNavy (@indiannavy) March 29, 2024
Inputs received on a potential piracy incident onboard Iranian Fishing Vessel 'Al-Kambar' late evening on #28Mar 24, approx 90 nm South West of Socotra.
Two Indian Naval ships, mission deployed in the #ArabianSea for… pic.twitter.com/PdEZiCAu3t
கடற்பரப்பு கண்காணிப்பில் இந்தியா..!
முன்னதாக இதேபோன்ற நடவடிக்கையில், கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளான MV Ruen என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்டது. சோமாலிய கடற்கொள்ளையர்கள் சரணடைய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குழுவினர் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இறுதியில் கடற்கொள்ளையர்கள் மும்பை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையானது பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பையும், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பாகுபாடின்றி கடற்பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய மீனவர்கள் அடங்கிய குழுவினரை மீட்ட இந்திய கடற்படையினருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபடடுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.