Indian Embassy Spy : ராணுவம் குறித்து ரகசிய தகவல்களை கசியவிட்ட இந்திய தூதரக அதிகாரி.. பாகிஸ்தான் சதி.. முறியடித்தது எப்படி?
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் வேலை பார்த்து வந்த இந்திய தூதரக ஊழியரை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு அதிதாரிகள் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக மாஸ்கோவில் வேலை பார்த்து வந்த இந்திய தூதரக ஊழியரை உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிதாரிகள் கைது செய்துள்ளனர். மீரட்டில் வைத்து தூதரக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், சதேந்திர சிவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சதி செயல்:
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பலபணித்துறையில் ஊழியராக (எம்டிஎஸ்) பணிபுரிந்து வந்துள்ளார். இந்திய ராணுவம் தொடர்பாக முக்கிய தகவல்களை பெற வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பணம் கொடுத்ததாக தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் தரும் வகையிலான தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளதாக தீவிரவாத தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம் ஹபூரில் உள்ள ஷாமஹியுதீன்பூர் கிராமத்தில் சதேந்திர சிவால் வசித்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல் கொடுத்த நெட்வொர்க்கில் முக்கிய நபராக இருப்பவர் சதேந்திர சிவால்.
மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது பதவியை பயன்படுத்தி ரகசிய தகவல்களை கசியவிட்டுள்ளார். பணத்தின் மீதான ஆசையால் இந்திய பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை குற்றம்சாட்டப்பட்ட சதேந்திர சிவால் கசியவிட்டுள்ளார்.
ராணுவம் குறித்து ரகசிய தகவல்களை கசியவிட்ட இந்திய தூதரக அதிகாரி:
இதுகுறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "புலனாய்வு தகவல்களை சேகரித்து, தீவிர கண்காணிப்பைத் தொடர்ந்து, மீரட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்திற்கு சதேந்திர சிவல் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். விசாரணையின் போது, அவர் திருப்திகரமான பதில்களை வழங்கத் தவறியுள்ளார். இறுதியில், உளவு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்
நாட்டிற்கு எதிராக போர் தொடுத்ததாக அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டப் பிரிவுகளின் கீழ் சிவாலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
Sources -
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) February 4, 2024
MEA is aware of the arrest of Satendra Siwal in Uttar Pradesh, who was posted as Security Assistant in Embassy of India, Moscow.
MEA continues to work with the investigative authorities in the matter.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "சதேந்திர சிவல் கைது செய்யப்பட்டது குறித்து தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என தெரிவித்துள்ளது.