சுற்றுச்சூழலுக்கு இனி பாதிப்பில்லை.. குறைந்த கார்பனைக் கொண்ட ஸ்டீல்.. மத்திய அரசின் திட்டம்!
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் ஒரு பகுதியாக, குறைந்த கார்பனைக் கொண்ட இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியை மேற்கொள்ள மத்திய அரசு 3 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் ஒரு பகுதியாக, எஃகு (ஸ்டீல்) உற்பத்தியில் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான மூன்று முன்னோடி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இந்த இயக்கத்தின் கீழ் எஃகு துறையில் முன்னோடித் திட்டங்களை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.
ஸ்டீல் தயாரிப்பில் பசுமை ஹைட்ரஜன்:
முன்னோடித் திட்டங்கள் மூலம், எஃகு தயாரிப்பில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட தொழில்நுட்பங்களை அடையாளம் காண்பதே இத்திட்டத்தின் நோக்கங்களாகும். இத்திட்டங்கள் பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எஃகு தயாரிக்கும் செயல்முறைகளின் பாதுகாப்பான செயல்பாடுகளை நிரூபிக்க முடியும்.
தொழில்நுட்ப சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை உருவாக்குவதுடன், அவற்றின் பொருளாதார நம்பகத்தன்மையை மதிப்பிடவும் முடியும். இதன் மூலம் குறைந்த கார்பனைக் கொண்ட இரும்பு மற்றும் எஃகு உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.
பெறப்பட்ட முன்மொழிவுகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எஃகு துறையில் மொத்தம் மூன்று முன்னோடி திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
3 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்:
இதற்கான மத்திய அரசின் மொத்த நிதியுதவி ரூ.347 கோடியாகும். இந்த முன்னோடித் திட்டங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது. இது இந்தியாவில் இத்தகைய தொழில்நுட்பங்களை அளவிட வழிவகுக்கும்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் 2023 ஜனவரி 4-ந் தேதி தொடங்கப்பட்டது. 2029-30ம் நிதியாண்டு வரை ரூ.19,744 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தூய்மையான எரிசக்தி மூலம் தற்சார்பு நாடாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்குக்கு இது பங்களிப்பதுடன், உலகளாவிய தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கும்.
இந்த இயக்கம் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில், கார்பன் நீக்கத்திற்கு வழிவகுக்கும். புதைபடிவ எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும். மேலும் பசுமை ஹைட்ரஜனில் தொழில்நுட்பம் மற்றும் சந்தைத் தலைமையை இந்தியா ஏற்க உதவும்.
உலகிலேயே சீனாதான் அதிகளவில் ஸ்டீலை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, உலகில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த ஸ்டீல் உற்பத்தியில் 54 சதவிகிதத்தை சீனாதான் உற்பத்தி செய்தது.
இதையும் படிக்க: One City One Card : பஸ், ரயில், மெட்ரோ எல்லாத்துக்கும் ஒரே அட்டை.. ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி