Air Force Day 2022: ஏவுகணையை தகர்க்கும்.. ஆளில்லா விமானத்தை சுக்குநூறாக்கும்! இந்தியாவில் தயாரான ஹெலிகாப்டர் பிரசந்த் பற்றி தெரியுமா?
மிக அதிக உயரமான இடங்களில் நன்றாக செயல்படுத்த முடிந்த இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்க இந்திய விமானப்படைக்கான ஆரம்ப ஒதுக்கீடு ₹3,500 கோடிக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டது.
அதன் போர்த்திறனுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்திய விமானப்படை திங்களன்று உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதியை அறிமுகப்படுத்தியது. இது பிரசந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவை பலவிதமான ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களைச் சுடும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது.
இலகுரக போர் ஹெலிகாப்டர்
அரசு நடத்தும் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆல் உருவாக்கப்பட்ட லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (LCH), அதாவது இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் என்று அழைக்கப்படும் இது, உயரமான பகுதிகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சௌதாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இது இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் திறனை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான மைல் கல் இது," என்றார். மேலும் இந்த ஹெலிகாப்டருக்கு பிரசந்த் (Prachand) என்று பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆயுதங்களை தாக்கும் ஆயுதம்
அடுத்த பல ஆண்டுகளில் இலகுரக போர் ஹெலிகாப்டர் இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையில் தாக்குதல் ஹெலிகாப்டர் அமைப்புகளின் அடித்தளமாக இருக்கும். 5.8 டன் எடையுள்ள இந்த இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே பல்வேறு ஆயுதங்களைச் சுடும் சோதனைகளை முடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கன் அப்பாச்சி ஹெலிகாப்டர் எங்களிடம் உள்ளது, ஆனால் இது அதை விட பெரியது மற்றும் அதிக திறன் கொண்டது. குறிப்பாக மிக அதிக உயரமான இடங்களில் செயல்படுத்த முடிகிறது. இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு திட்டம் மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். இந்திய விமானப்படைக்கான ஆரம்ப ஒதுக்கீடு ₹3,500 கோடிக்கு மேல் நிர்ணயிக்கப்பட்டது. அனுமதி கிடைத்தவுடன் விலை படிப்படியாக மாற்றியமைக்கப்படும்.
தயாரிப்புகள்
இந்த ஹெலிகாப்டர்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாராகிறது, தற்சார்பு பொருளாதாரத்திற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்த ஹெலிகாப்டரின் சோதனைகள் லடாக் பகுதியில் நடந்தன. இதன்மூலம் சீனாவின் ஆளில்லா விமானங்களை வான் ஏவுகணைகள் மூலம் வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது. இது தரையில் உள்ள டாங்கிகளை காற்றில் இருந்தபடியே தாக்கி வெடிக்கச்செய்யும் திறன் பொருந்தியது. இதில் 95 ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திற்கு செல்கின்றன. ஒரு சில ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே சேவையில் இணைந்துவிட்டன. மேலும் இந்திய விமானப்படைக்கு சுமார் 65 ஹெலிகாப்டர்கள் கொடுக்கப்பட உள்ளது.
என்னென்ன திறன்கள் கொண்டுள்ளது?
மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் துருவுடன் இதற்கு பல ஒற்றுமைகள் உள்ளன. கவச-பாதுகாப்பு அமைப்புகள், இரவு தாக்குதல் திறன் மற்றும் ஆபத்து சமயங்களில் தரையிறங்க தனியாக கியர் போன்றவற்றைக் கொண்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தேவையான சுறுசுறுப்பு, சூழ்ச்சித்திறன், நீட்டிக்கப்பட்ட வீச்சு, அதிக உயர செயல்திறன், போர் தேடல் மற்றும் மீட்பு (CSAR), எதிரியின் வான் வழி ஆயுதங்களை அழித்தல் (DEAD) மற்றும் எதிர் கிளர்ச்சி (CI) உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை, எல்லா வகையான வானிலை அமைப்பிலும் செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இதனை அதிக உயரத்தில் உள்ள பதுங்கு குழிகளை உடைத்தல், காடுகள் மற்றும் நகர்ப்புற சூழல்களில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தரைப்படைகளை ஆதரிப்பதற்காகவும் பயன்படுத்த முடியும். இந்த ஹெலிகாப்டரை மெதுவாக நகரும் விமானங்கள் மற்றும் எதிரிகளின் ரிமோட் பைலட் விமானங்களுக்கு (RPAs) எதிராகவும் பயன்படுத்தலாம்.
IAF மற்றும் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது ஒரு சக்திவாய்ந்த தளமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.