கனட மக்களுக்கு மீண்டும் விசா தர தொடங்கிய இந்தியா.. உறவில் முன்னேற்றம் ஏற்படுமா?
கனட தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திலும் டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள துணை தூதரகங்களிலும் விசா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கனட மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விசா வழங்கவதை இந்தியா தொடங்கியுள்ளது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
விசா சேவையை தொடங்கிய இந்தியா:
இந்தியாவுக்கு எதிராக கனடாவும், கனடாவுக்கு எதிராக இந்தியாவும் மாறி மாறி நடிவடிக்கைகள் எடுத்தன. அந்த வகையில், தூதரக அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும் என கனடாவை இந்தியா வலியுறுத்தியது. அதை ஏற்ற கனடா, தங்களின் தூதரக அதிகாரிகளில் 41 பேரை அண்மையில் திரும்பப் பெற்றது. கனட தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட விவகாரம் இரு நாட்டு உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படும் வகையிலான நடவடிக்கை ஒன்றை இந்தியா எடுத்துள்ளது. கனட மக்களுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் விசா வழங்கவதை இந்தியா தொடங்கியுள்ளது. கனட தலைநகர் ஒட்டாவாவில் உள்ள தூதரகத்திலும் டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களில் உள்ள துணை தூதரகங்களிலும் விசா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நுழைவதற்கான என்ட்ரி விசா, வர்த்தகம் செய்வதற்கான பிசினஸ் விசா, மருத்துவ விசா, மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான கான்ஃபரன்ஸ் விசா ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய, கனட உறவில் தொடர் சிக்கல்:
முன்னதாக, தூதர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில், கனடா மீது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். கனட தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டின் விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்து தங்களுக்கு கவலைகள் இருந்ததாகவும் எனவே அவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை எடுத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
"இந்திய, கனட நாடுகளுக்கிடையேயான உறவு கடினமான கட்டத்தில் உள்ளது. கனட அரசியலின் குறிப்பிட்ட பிரிவினர், எங்களுக்கு பிரச்னையாக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் எங்களுக்கு பிரச்னை தந்து வருகிறது என கூற விரும்புகிறேன்" என குற்றஞ்சாட்டினார்.
கனட தாதரக அதிகாரிகளை இந்தியா குறைத்திருப்பது இரு நாடுகளிலும் வாழும் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது. கனடாவில் சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் இரண்டு சதவீதமாக உள்ளனர்.
இதில், சிலர் காலிஸ்தான் தனி நாடு வேண்டும் என கோரி வருவது இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம் இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை தந்துள்ளது.