கிலோ ரூ.50-க்கு குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை
கிலோ ரூ.50க்கு குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் விளையும் ஆப்பிள்களின் விலை சரிவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கிலோ ரூ.50க்கு குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் விளையும் ஆப்பிள்களின் விலை சரிவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசின் புதிய உத்தரவின் அடிப்படையில் விலை, காப்பீடு, போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் உள்ளடக்கி கிலோ ரூ.50க்கும் குறைவாக உள்ள ஆப்பிள்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களால் காஷ்மீர் ஆப்பிள்களின் விலை வெகுவாக சரிந்துள்ள நிலையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஊடக அறிக்கைகள் பல, ஆப்பிள் விலை சரிவால் காஷ்மீரி ஆப்பிள் விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டங்களை விற்றுவிடவோ அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தவோ செய்வது அதிகரித்து வருவதாக எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தான் மத்திய அரசு இந்த புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இருப்பினும் ஒரு சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அண்டை நாடான பூட்டானுக்கு இந்த கெடுபிடி இல்லை என்று தெரிவித்துள்ளது.
பூடானில் இருந்து ஆப்பிள்களை வழக்கம் போல் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் பூட்டான் ஆப்பிள்களை இறக்குமதி செய்வதற்கு மட்டும் ஏன் தடையில்லை என்பதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
காஷ்மீர் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஆப்பிள்கள்தான். குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் விளையும் ஆப்பிள்கள் மிகுந்த சுவையுடன் இருக்கும். அங்கு விளையும் ஆப்பிள்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
காஷ்மீர் நாட்டின் மொத்த ஆப்பிள் பயிரில் 75 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது மற்றும் அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் தான், கிலோ ரூ.50க்கு குறைவான ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் விளையும் ஆப்பிள்கள் குறிப்பாக காஷ்மீரில் விலையும் ஆப்பிள்களின் விலை சரிவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.