Crude Oil: 30 ஆயிரம் கோடி ட்ரம்பே... இந்தியா - ரஷ்யா உறவு பலே பலே - கச்சா எண்ணெய்யால் கதறும் அமெரிக்கா!
ட்ரம்பின் மிரட்டல் வரி விதிப்பிற்கு பிறகு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து முன்பை காட்டிலும் அதிகளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.

உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா கடந்த மாதம் இந்தியா உள்பட பல நாடுகள் மீதும் ஏற்றுமதி வரியை அதிகப்படுத்தியது. இந்தியா மீது 50 சதவீதம் ஏற்றுமதி வரியை விதித்தது.
கச்சா எண்ணெய் இறக்குமதி:
இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு நிதியுதவி செய்வது போல அமைகிறது என்ற காரணத்தை கூறி, இந்தியா கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் வாங்கக்கூடாது என்று வரி விதிப்பின் மூலம் மிரட்டியது.

ஆனால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு இந்தியா துளியளவும் அஞ்சவில்லை. மாறாக, இந்தியா தற்போது ரஷ்யா மட்டுமின்றி சீனாவுடனான தனது உறவையும் அதிகரித்துள்ளது. மேலும், வரி விதிப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் வாங்கியுள்ளது.
30 ஆயிரம் கோடியை கடந்த வர்த்தகம்:
கடந்த ஜுலை மாதம் 27 ஆயிரத்து 945 கோடிக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது. டரம்பின் நடவடிக்கை தொடங்கிய ஆகஸ்ட் மாதத்தில் இந்த கொள்முதல் மேலும் 3 ஆயிரம் கோடிக்கு அதிகமாகியுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூபாய் 30 ஆயிரத்து 015 கோடிக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளது. மேலும், ட்ரம்பின் வரி விதிப்பிற்கு பிறகு இந்தியாவிற்கு ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியில் மேலும் தள்ளுபடி செய்துள்ளது.
அமெரிக்காவிற்கு பதிலடி:
இந்தியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், இந்தியாவை தனது நடவடிக்கை மூலமாக அச்சுறுத்தலாம் என்று கருதிய அமெரிக்காவிற்கு இந்தியா துளியளவும் அஞ்சவில்லை என்பதையே இந்த கச்சா எண்ணெய் இறக்குமதி எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும், இந்தியா கச்சா எண்ணெய் மட்டுமின்றி நிலக்கிரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றையும் இறக்குமதி செய்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் உள்பட புதைபடிவ எரிபொருட்கள் வாங்கும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா ரஷ்யாவிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் மட்டும் அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பிறகு ரூபாய் 42 ஆயிரத்து 435 கோடிக்கு இறக்குமதி செய்துள்ளது.
சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா:
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்பட புதைபடிவ பொருட்கள் அதிகம் வாங்கும் 5 நாடுகளின் பட்டியலில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. சீனா, இந்தியா, துருக்கி, ஐரோப்பியா யூனியன் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு புதைபடிவ எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கச்சா எண்ணெய் மட்டும் ரூபாய் 30 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ள இந்தியா கச்சா எண்ணெய் உள்பட புதைபடிவ பொருட்கள் ரூபாய் 37 ஆயிரத்து 260 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்தியாவின் இந்த செயல்பாடுகள் அமெரிக்காவின் அடாவடி நடவடிக்கைக்கு தக்க பதிலடியாக அமைந்துள்ளது. இந்தியா கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்கக்கூடாது என்று பேசிய அமெரிக்காவிற்கு, நாட்டின் நலன் கருதி தொடர்ந்து கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் என்று இந்தியா பதில் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















