India Corona Case Today : இந்தியாவில் ஒரேநாளில் 3.49 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி..
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகின்றது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவிவருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள. அதேநேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 3.14 லட்சம், நேற்று 3.36 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.49 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒரேநாளில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695-இல் இருந்து ஒரு கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920-ல் இருந்து ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 311-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 113 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159-இல் இருந்து ஒரு கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110-ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 85 சதவிகிதத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.16 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 751-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல் புதிய பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் தமிழகத்தில் வரும் 30 ஏப்ரல் 2021 வரை கோவில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மால்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் இயங்காது. பால் மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும்.