I.N.D.I.A Bloc: மும்பையில் இன்று கூடுகிறது I.N.D.I.A கூட்டணி..! ஒருங்கிணைப்பாளராகிறார் கார்கே? புதியதாக இணையும் 2 கட்சிகள்?
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.
I.N.D.I.A கூட்டணி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவை வீழ்த்தும் ஒற்றை எண்ணத்துடன் ஒரு அணியில் சேர்ந்த எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகாரில் நடைபெற்றது. அதைதொடர்ந்து, பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து, கூட்டணியின் அடுத்த கட்ட பணிகள் தொடர்பாக ஆலோசிக்க மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று தொடங்க உள்ளது.
மும்பையில் ஆலோசனைக் கூட்டம்:
உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவு மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. சாந்தாகுரூஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று ஆலோசனையில் ஈடுபட்டு விருந்தில் பங்கேற்கும் தலைவர்கள், நாளை முறைப்படியான கூட்டத்தை நடத்துவார்கள்.
குவியும் தலைவர்கள்:
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே மும்பை வந்துவிட்டனர். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் ஆகியோர் இன்று மும்பை செல்கின்றனர். மேலும், மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்த பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
முக்கிய இலக்கு என்ன?
முன்னதாக பாட்னா மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. தங்களின் பலத்த நிரூபிக்க மட்டுமே முயற்சி செய்தன. இந்நிலையில், இன்று தொடங்கும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, தொகுதிப் பங்கீடு, 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வது, அனைத்து மாநிலங்களிலும் கூட்டணியின் பணியை சீரமைக்க கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது, கூட்டணியின் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த கூட்டணியில் புதியதாக இரண்டு கட்சிகள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் வேட்பாளர் யார்?
அதேநேரம், பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. நிதீஷ் குமார், அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர்கள் பேசி வருகின்றனர். இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.