கடந்த 3 ஆண்டுகளில் வரதட்சணை, வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு அளித்த தகவல்..
கடந்த 3 ஆண்டுகளில் வரதட்சணை, வன்கொடுமை, பாலியல் சீண்டல் முயற்சி தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் வரதட்சணை, வன்கொடுமை, பாலியல் சீண்டல் முயற்சி தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவான வரதட்சணை, பலாத்காரம், பாலியல் சீண்டல் முயற்சி குற்றங்கள் குறித்த புகார்களின் அடிப்படையில் இத்தகவலைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இந்தப் பதிலை அளித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வரதட்சணைக் கொடுமை தொடர்பாக 357 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 2021ல் 341 புகார்களும் 2020ல் 330 புகார்களும் பெற்றுள்ளன.
அதேபோல் பாலியல் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை முயற்சிகள் தொடர்பான புகார்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. 2022ல் தேசிய மகளிர் ஆணையத்த்ல் 1710 புகார்கள் பாலியல் பலாத்காரம் சம்பந்தபமாக பதிவாகின. இது 2021ல் 1681 ஆகவும், 2020ல் 1236 ஆகவும் இருந்தது.
இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி இராணி, இந்த ஆண்டு ஜனவரி எடுத்த கணக்கின்படி நாடு முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்க்களில் உள்ள 764 விரைவு நீதிமன்றங்கள் மற்றும் 411 போக்ஸோ நீதிமன்றங்கள் வாயிலாக 1 லட்சத்து 44 ஆயிரம் வழக்குகள் ஃபைசல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.
கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.
கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.
பாலியல் வன்கொடுமை:
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட முந்தைய புள்ளிவிவரங்கள் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலையை படம்போட்டுக் காட்டுவதாக அமைந்தது. அந்த அறிக்கையின்படி, 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.
2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.
எண்ணிக்கைஅடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.