Accident: நிலக்கரி சுரங்கத்தில் திடீர் சரிவால் விபத்து.. 3 பேர் உயிரிழப்பு - சிக்கிக்கொண்டவர்களின் கதி என்ன?
மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களைக் மீட்ட பிறகு, இறந்தவர்கள் மற்றும் சிக்கியவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை தெரியவரும்.
ஜார்க்கண்ட் மாநிலம் போவ்ரா பகுதியில் இயங்கி வரும் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் இன்று சரிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர். நிலக்கரி சுரங்கத்தில் பலர் சிக்கியிருப்பதால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
சரிந்து விழுந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கம்:
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பி.சி.சி.எல்) நிறுவனத்தின் போவ்ரா பகுதியில் இயங்கி வரும் நிலக்கரி சுரங்கத்தில் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. தன்பாத்தில் இருந்து 21 கிமீ தொலைவில் இந்த நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.
விபத்து குறித்து விரிவாக பேசிய சிந்திரி துணைக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குமார், "மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்ட பிறகு, இறந்தவர்கள் மற்றும் சிக்கியவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை தெரியவரும்" என்றார்.
உள்ளூர்வாசிகளின் உதவியுடன் நடைபெறும் மீட்பு பணிகள்:
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "சுரங்கம் சரிந்து விழுந்துபோது, உள்ளூர் கிராம மக்கள் பலர் சட்டவிரோத சுரங்கத்தில் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்தனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன், இடிபாடுகளில் இருந்து 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் பினோத் ஓரான் தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்கங்களில் நிகழும் விபத்துகளை உடனுக்குடன் அறிவிப்பதை உறுதி செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இணையதளத்தை, நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பே முதன்மையானது:
கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மூலம் விபத்துக்கான காரணத்தை அகற்றுவதற்கான மூல காரண பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தி விபத்து விசாரணையை எளிதாக்கும் வகையில் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற விபத்துகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு விசாரணைகளின் பரிந்துரைகளின் பேரில் நிலக்கரி நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் இந்த இணையத்தளம் உதவிடும்.
"நிலக்கரித் துறையில் பாதுகாப்பே முதன்மையானது. பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்குமாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து நிலக்கரி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்திகிறேன். கோவிட்-19 தொற்று பரவல் மற்றும் நிலக்கரி வயல் பகுதிகளில் நீடித்த பருவமழை ஆகிய சவால்கள் இருந்தபோதிலும், நிலக்கரி உற்பத்தியில் இந்த ஆண்டு மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நிலக்கரி நிறுவனங்களை பாராட்டுகிறேன்.
நாட்டில் 2021-22ஆம் நிதியாண்டில், 777.23 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 716 மில்லியன் டன் உடன் ஒப்பிடும்போது 8.55 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது" என்றார்.