Chandrayaan 3 Update: திடீர் சிக்கல்..! 4 நாட்கள் இழப்பு, சந்திரயான் 3 லேண்டரின் தரையிறக்கம் ஒத்திவைக்கப்படும்? - இஸ்ரோ
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் என, இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூழல் சரியாக அமையாவிட்டால் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் தேதி ஒத்திவைக்கப்படலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 3:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 39 நாட்கள் பயணம் செய்து நிலவை நெருங்கியுள்ள அந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க தயாராக உள்ளது. தற்போதைய சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
நாளை தரையிறக்கம்:
நாலை மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கம் செய்யப்படும் எனவும், அந்த நிகழ்வு மொத்தமாக நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும் ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்து இருந்தது. அதோடு, சந்திரயான் 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் 3 லேண்டர் இடையே தொலைதொடர்பு இணைப்பு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தகவல் பரிமாற்றம் எந்தவித சிக்கலும் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரையிறங்கும் தேதி மாற்றம்:
திட்டமிட்டபடி நாளை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என எதிர்பார்க்கும் சூழலில், திடீரென தரையிறக்க நிகழ்வு தாமதமாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குனர் நிலேஷ் எம் தேசாய் “
ஆகஸ்ட் 23 லேண்டரை நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறக்கம் செய்வதற்கான முழு பணிகளையும் நாங்கள் செய்துள்ளோம், அன்று தரையிறக்கம் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” இருப்பினும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, லேண்டர் செயல்பாடு மற்றும் சந்திரனில் உள்ள சூழலின் அடிப்படையில் அதை அந்த நேரத்தில் தரையிறக்குவது பொருத்தமானதா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். சூழல் சாதகமாக இல்லை எனத் தோன்றினால், ஆகஸ்ட் 27-ம் தேதி சந்திரனில் லேண்டர் தரையிறக்கப்படும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்” என பேசியுள்ளார்.
இந்தியாவிற்கு இழப்பு:
சந்திரயான்-2 லேண்டர் தரையிக்கத்தின் போது ஏற்பட்ட பின்னடைவை கருத்தில் கொண்டு, சந்திரயான்-3 உடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இஸ்ரோ தீவிரமாக கண்காணித்து வருகிறது. சந்திரயான்-2 தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட இஸ்ரோ, விக்ரம் லேண்டரின் கால்களை வலுப்படுத்தி, லேண்டரைக் கொண்டு மிகக் கடுமையான சோதனைகளைச் செய்து, இந்த முறை அனைத்து திருத்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ரஷ்ய லூனா-25 ஆய்வு சமீபத்தில் விபத்துக்குள்ளான பிறகு, சந்திரனில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை அடைந்த பிறகு, லேண்டர் தொகுதியுடன் எந்த ஆபத்தான நடவடிக்கையை எடுக்கவும் இஸ்ரோ விரும்பவில்லை.
ஆகஸ்ட் 23 அன்று சூழல் சாதகமாக இல்லாவிட்டால், தரையிறங்குவதை தாமதப்படுத்த இஸ்ரோ தயங்காது. அதன்படி, விக்ரம் லேண்டரின் சுமூகமான தரையிறக்கம் மட்டுமே இஸ்ரோவின் தற்போதைய முன்னுரிமையாக உள்ளதால், சூழல் சரியாக அமையாவிட்டால் லேண்டர் தரையிறக்கம் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும். அப்படி நடந்தால், ரோவர் மற்றும் லேண்டரின் செயல்பாடுகளுக்காக இஸ்ரோ 4 பூமி நாட்களை இழக்க நேரிடும். அதாவது, ஏற்கனவே 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ரோவர் 14 நாட்கள் ஆய்வு செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், அது 10 நாட்களாக குறைந்துவிடும்.