Ideas of India Summit 2023: தாக்கரேவின் சித்தாந்தங்கள் போதும்; சின்னம், பெயர் தேவையில்லை - மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிராவில், தேவேந்திர பட்னாவிஸை தவிர்த்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஷிண்டே கூறுகையில், "ஒருவர் தனது கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதற்கு பெரிய மனம் தேவை' என தெரிவித்தார்.
ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு பிப்.24 ஆம் தேதி தொடங்கி பிப்.25 தேதி வரை நடைபெற்று வந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் பிப். 25 ஆம் நாள் நிகழ்வில் பங்கேற்றார்.
”ஏன் உத்தவ் தாக்கரேவை விட்டு சென்றனர்?”
அப்போது ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது, பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகள்தான், எங்கள் கட்சியின் மிகப்பெரிய சொத்து. சிவசேனா கட்சி பாலாசாகேப் தாக்கரேவால் நிறுவப்பட்டது. மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது 40-50 எம்.எல்.ஏக்கள், 13 எம்.பி.க்கள் மற்றும் லட்சக்கணக்கான 'தொண்டர்கள் ஏன் உத்தவ் தாக்கரேவை விட்டு சென்றனர் என்பதை, அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
உத்தவ் தாக்கரேவின் அதிகார மோகம்தான் இந்த நிலைமைக்கு காரணம். பாலாசாகேப் ஒதுக்கி வைத்தவர்களைக் கொண்டு, அவர் அரசாங்கத்தை அமைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிவசேனா, அதன் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. அப்போது, பாஜக-வுடனான பிரச்னையை சரி செய்யுமாறு உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை வைத்தேன்.
”எதையும் திருடவில்லை”
சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை திருடியதாக, உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஏக்நாத் ஷிண்டே, நாங்கள் யாரிடமும் எதையும் திருடவில்லை. எங்கள் பெயர் மற்றும் சின்னம் மற்றவர்களுக்கு அடமானம் வைக்கப்பட்டது, நான் அதை விடுவித்தேன் என தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேவை மேலும் விமர்சித்த ஷிண்டே, "மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஈகோவை ஒதுக்கி வைத்து பணிவுடன் இருக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்து கொண்டால் பணம் கிடைக்காது. மத்திய அரசுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு போதுமான ஆதரவு கிடைத்து வருகிறது. பிரதமர் மோடி, எங்கள் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்து, எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
”சின்னம் மற்றும் பெயர் தேவையில்லை”
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதற்காக பாஜகவிடம் இருந்து ரூ.2,000 கோடி வாங்கியதாக, எம்.பி சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியது குறித்து கூறுகையில், "எம்.எல்.ஏக்களை ஒருபோதும் வாங்கவோ விற்கவோ முடியாது. மக்களுக்காகவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதன் மூலம், எதிரணியினரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பேன்.
தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் விருப்பத்தின் பேரில் செயல்படுகிறது என்ற உத்தவ் தரப்பினரின் குற்றச்சாட்டு குறித்து ஷிண்டே கூறுகையில், "தேர்தல் ஆணையத்தின் முடிவு தனக்கு எதிராக இருந்தால் அது ஒருதலைப்பட்சமானது என கூறுவது தவறு". பாலாசாகேப்பின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல, அவரது சித்தாந்தங்கள் போதுமானது. எங்களுக்கு கட்சி சின்னம் மற்றும் பெயர் தேவையில்லை" என கூறினார்.
தேவேந்திர பட்னாவிஸை தவிர்த்து முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து ஷிண்டே கூறுகையில், "ஒருவர் தனது கட்சியின் வழிகாட்டுதல் மற்றும் முடிவுக்கு கட்டப்படுவதற்கு பெரிய மனம் தேவை.
”இரட்டை என்ஜின் அரசாங்கம்”
"நான் முந்தைய அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்தேன், ஆனால் மத்திய அரசுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் ஈகோ பிரச்சினைகள் காரணமாக, அப்போது பணிகள் பாதிக்கப்பட்டன. மாநிலத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். தற்போது, வளர்ச்சிக்கான அனைத்து தடைகளையும் அகற்றியுள்ளோம்.
தற்போது, 150 கி.மீ வேகத்தில் அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது, "மகாராஷ்டிரா மாநிலம் இந்திய நாட்டின் வளர்ச்சி இயந்திரம். இரட்டை என்ஜின் அரசாங்கத்தால், மாநிலத்தின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற பிரதமரின் கனவில் எங்களுக்கு பெரிய பங்கு உள்ளது. மேலும், மகாராஷ்டிராவை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கை நோக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறோம்
”போதுமான வளமுள்ளது”
உலக பொருளாதார உச்சி மாநாட்டிற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் சென்றிருந்த போது, பல உலகத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்தேன். அவர்கள் மத்திய அரசுடனான எங்கள் உறவுகள் குறித்து விசாரித்தனர். உறவு சிறப்பாக உள்ளது என கூறினேன்.
1,37,000 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம். இங்கு முதலீடுகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எங்களிடம் போதுமான திறமையான மனிதவளம், உள்கட்டமைப்பு மற்றும் நிலம் உள்ளது என மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசினார்