Watch Video: சூடா மிளகாய் பஜ்ஜி மிஸ் ஆகிரும்.. சிக்னலில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. காவலரின் அதிரடி ஆக்ஷன்!
ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைக்காக நோயாளி செல்வதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக அவசர அவசரமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஹைதராபாத் சிக்னல் ஒன்றில் சைரன் ஒலித்தபடி வேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ், டீ கடையில் நிற்பதும், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் போன்ற வீடியோ இணையத்தில் ஆம்புலன்ஸ் வேகத்தைவிட மிக வேகமாக வைரலாகி வருகின்றது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஷீர்பாக் சந்திப்பு சிக்னலில், கடந்த திங்கள்கிழமை இரவு சைரன் ஒலித்தபடி தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அப்போது, ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைக்காக நோயாளி செல்வதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக அவசர அவசரமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இந்த சூழலில் சிக்னலைத் தாண்டி 100 மீட்டர் தொலைவில் அந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் திடீரென நின்றது. ஏன் அந்த ஆம்புலன்ஸ் அங்கு நின்றது என கவனித்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஆம்புலன்ஸ் அருகே சென்று பார்த்தபோது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், இரண்டு நர்சுகள் மற்றும் சில மருத்துவமனை ஊழியர்கள் அங்குள்ள கடையில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரி விசாரணையில் ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாததையும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சைரன் போட்டதையும் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எச்சரித்த காவல்துறை அதிகாரி, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்க்காக ரூ. 1,000 அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தகவலையும் தெரிவித்துள்ளார்.
#TelanganaPolice urges responsible use of ambulance services, citing misuse of sirens. Genuine emergencies require activating sirens for swift and safe passage. Strict action against abusers is advised.
— Anjani Kumar IPS (@Anjanikumar_IPS) July 11, 2023
Together, we can enhance emergency response and community safety. pic.twitter.com/TuRkMeQ3zN
மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் டீ மற்றும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட அனைத்து காட்சிகளும் போக்குவரத்து காவலரின் சட்டை கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொலியை பகிர்ந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தெலங்கானா டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் போலீஸ்காரர் மற்றும் டிரைவருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தை வைரலான வீடியோவில் உள்ள காவல்துறை அதிகாரி, ”இதற்காக ஏன் சைரனை பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் மருத்துவமனைக்குதானே செல்ல வேண்டும், இங்கே யாருக்கு உடம்பு சரியில்லை? நீங்கள் சைரன் அடித்ததால்தான் நான் உங்களுக்கு டிராபிக் க்ளியர் செய்து கொடுத்தேன், இப்போது இங்கே வந்து டீயும், மிளகாய் பஜ்ஜியும் சாப்பிடுறீங்க..” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஓட்டுநர், “ நாங்கள் மதியம் எந்தவொரு உணவை சாப்பிடவில்லை. அதனால்தான் இங்கு ஏதாவது சாப்பிடலாம் என்று வண்டியை நிறுத்தினோம்.” என தெரிவித்தார்.
இந்த வீடியோவை டிஜிபி அனாஜ்னி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஆம்புலன்ஸ் சேவைகளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.