Hyderabad: மனைவியை அடைத்து வீட்டுக்குள் சுவர்.. வரதட்சணை வெறியால் கொடூரனாக மாறிய தொழிலதிபர்!
வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும்,வீட்டுக்குள் சுவர் கட்டி மனைவியை அடைத்து வைத்ததாகவும் அவர் மீது பரபர புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் வரதட்சணைக் கேட்டு மனைவியை வீட்டுக்குள் வைத்து கணவர் சுவர் எழுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் புகழ்பெற்ற ஸ்வீட் கடை புல்லா ரெட்டியின் ஸ்வீட் கடை. ஆந்திரா,தெலங்கானாவில் பிரபலமான இந்த ஸ்வீட் கடை 200க்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளது. புல்லா ரெட்டியின் பேரன் தான் தற்போது வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். வரதட்சணைக் கேட்டு மனைவியை துன்புறுத்தியதாகவும்,வீட்டுக்குள் சுவர் கட்டி மனைவியை அடைத்து வைத்ததாகவும் அவர் மீது பரபர புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கல்யாணம்..
புல்லா ரெட்டியின் பேரன் ஏக்நாத் ரெட்டிக்கும், பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் பிரகன்யாவுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ரூ.75 லட்சம் ரொக்கப்பணம், 20 லட்சம் மதிப்பில் வெள்ளி , 35 லட்சம் மதிப்பில் வைர நகை மற்றும் மற்ற சீதனம் என பெரிய அளவில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதல் வரதட்சணையாக ஹைதராபாத்தில் உள்ள வணிக வளாகத்தையும் கேட்டுள்ளனர். கேட்டதையெல்லாம் கொடுத்த பெண் வீட்டார் வணிக வளாகத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அதனைக் குறிப்பிட்டே தினம் தினம் பிரகன்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் ஏக்நாத் குடும்பத்தினர். வருடங்கள் கடந்தோட ஏக்நாத் - பிரகன்யா தம்பதிக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. 7 வருடங்கள் உருண்டோடிய நிலையில் வரதட்சணைக் கேட்டு கடுமையாக அழுத்தம் கொடுத்துள்ளனர் ஏக்நாத் குடும்பத்தினர்.
வரதட்சணை கொடுக்க முடியாது என்றால் விவாகரத்து கொடுங்கள் என கடந்த ஆண்டு விவகாரத்துக்கும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால் அவர்களது விவாகரத்து தள்ளுபடி ஆகியுள்ளது. இந்த நிலையில் ஒரே வீட்டில் கணவன் மனைவி பேசிக்கொள்ளாமல் தங்கி இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத், மனைவி, மகள் தங்கி இருந்த அறையின் மின்சாரம், தண்ணீரை துண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, பிரகன்யா தங்கி இருந்த அறையை அடைத்து சுவர் ஒன்றையும் எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகன்யா போலீசாரிடம் புகாரளித்துள்ளார்
புகார்..
வீட்டில் சுவர் எழுப்புவதை பிரகன்யா தன்னுடைய பெற்றோருக்கு தெரிவித்த நிலையில் போலீசார் உதவியுடன் ஏக்நாத் வீட்டுக்கு வந்த போலீசார் சுவரை இடைத்து பிரகன்யாவை மீட்டுள்ளனர். இது குறித்து பிரகன்யா அளித்துள்ள புகாரில் தொடர்ந்து வரதட்சணைக் கேட்டு துன்புறுத்தியதாகவும், தலையணையை அழுத்தி கொலை செய்ய முயற்சித்ததாகவும், வீட்டுக்குள் சுவர் எழுப்பி அடைத்து வைக்க முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின்படி 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.