உ.பி உள்ளாட்சி தேர்தலில் பாஜக வென்றது எப்படி?- கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள்!
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் 3052 இடங்களில் 603 இல் மட்டுமே வென்ற பாஜக, 75 மாவட்ட தலைவர் இடங்களில் 67இல் வென்றுள்ளது. அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலில் பாஜக வெற்றிக்கு இது உதவுமா?
70 நாடாளுமன்ற தொகுதிகளையும் 404 சட்டமன்ற தொகுதிகளையும் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக விளங்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மொத்த உள்ள 75 இடங்களில் 67 இடங்களை பாஜக பெற்றுள்ளது. அடுத்தாண்டு உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பதற்கான முன்னோட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அமைந்துள்ளதாக பாஜகவினர் கூறிவருகின்றனர். உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கான புகழ் அனைத்தும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத்தையே சாரும் எனவும் பிரதமர் நரேந்திரமோடி கூறியிருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 3052 இடங்களில் வெறும் 603 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, மாவட்ட தலைவர் பதவிகளில் மொத்தமுள்ள 75 இடங்களில் 67 இடங்களை எப்படி கைப்பற்றியது என்ற கேள்வியைத்தான் பரவலாக அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வரும் கேள்வியாக உள்ளது.
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி தலைவரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வதில்லை, மக்கள் வாக்களித்து தேர்வு செய்த உள்ளாட்சி உறுப்பினர்கள்தான் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்கின்றனர். இதன்படி உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 3,052 இடங்களில் 842 இடங்களை சமாஜ்வாதி கட்சி பெற்றிருந்தது. வெறும் 603 இடங்களை மட்டுமே பாஜக வென்றிருந்த நிலையில் மற்ற அனைத்து இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே கைப்பற்றி இருந்தனர்.
வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரையும் தங்களுக்கு சாதகமாக விலைக்கு வாங்கியே இந்த வெற்றியை பாஜக சாதகமாக்கி கொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த தேர்தலில் 21 மாவட்ட தலைவர்களை போட்டியின்றி பாஜக தேர்வு செய்துள்ளது. வாரணாசியில் சமாஜ்வாதி கட்சியை விட பாதி இடங்களை மட்டுமே வென்ற பாஜக போட்டியின்றி மாவட்ட தலைவர் பதவியை வென்றுள்ளது. மாவட்ட தலைவர்களுக்கான போட்டியில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். உத்தரபிரதேசத்தில் முக்கிய கட்சியாக வலம் வரும் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் போட்டியிடாததால் அக்கட்சியினர் பாஜகவுக்கு ஆதரவாகவே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
உண்மையில் உத்தரபிரதேச உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக எண்ணிக்கை அடிப்படையில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் சுயேட்சைகளை கொண்டே இந்த வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்களும் எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர். சுயேட்சைகளை வளைத்து ஆட்சி அமைக்கும் யுக்தியை சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே பாஜக இதுவரை பயன்படுத்தி வந்த நிலையில் அதனை உள்ளாட்சி தேர்தல்களிலும் வழக்கமாக்கி கொண்டுள்ளதாக விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2010 ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியும், 2016 ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் இதேபோல் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில் அடுத்த வந்த சட்டபேரவை தேர்தல்களில் இக்கட்சிகள் படுதோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.