மணமகனுடன் ஓட்டம் பிடித்த குதிரை... 4 கி.மீ., தூரம் விரட்டி மீட்ட உறவினர்கள்...!
ராஜஸ்தானில் பட்டாசு வெடி சத்தம் கேட்டு அலறியடித்து, மணமகனுடன் சுமார் 4 கிலோ மீட்டர் குதிரை ஓடியதால் திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஒவ்வொரு ஊர்களிலும் பல்வேறு வகையான கலாச்சாரங்களின்படி திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் பொதுவாக திருமணத்தின்போது மணமகன் மற்றும் மணமகள்களை குதிரைகள், வாகனங்கள் மூலமாக என்று விதவிதமாக ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம். திருமணத்திற்கு முன்பு மணமக்களை தனித்தனியாகவும், திருமணத்திற்கு பின்பு மணமக்களை ஒன்றாகவும் அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்திலும் திருமணங்களில் பல்வேறு சடங்குகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அந்த மாநிலத்தில் அமைந்துள்ளது அஜ்மீர். ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற நகரங்களில் அஜ்மீர் நகரமும் ஒன்றாகும். அந்த நகரத்தில் நேற்று திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்திற்காக மணமகனை திருமண வீட்டார்கள் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர்.
திருமண விழாவில் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்காக பட்டாசுகள் வெடிப்பது இந்தியா முழுவதும் தற்போது பழக்கமாக உள்ளது. இந்த நிலையில், மணமகன் வருகை காரணமாக அவரது உறவினரகள் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து வந்தனர். பட்டாசுகளை ஆர்வத்துடன் வெடித்து வந்த அவரது உறவினர்கள் ஆர்வ மிகுதியில், மணமகன் வந்த குதிரையின் முன்பு பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
திடீரென பட்டாசு சத்தம் கேட்டதால், மணமகன் அமர்ந்திருத்த குதிரை பயத்தில் மிரண்டது. பயத்தில் மிரண்டதுடன் மட்டுமில்லமால் அந்த குதிரை, மணமகனுடன் அந்த இடத்தில் இருந்து பயத்தில் ஓடியது. திடீரென மணமகனுடன் குதிரை ஓடியதால் திருமண வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்களும் அங்கிருந்த கார் மற்றும் பைக்கில் குதிரையை துரத்திச் சென்றனர். மணமகனும் குதிரை வேகமாக சென்ற காரணத்தால் கீழே குதிக்க பயந்து கொண்டு குதிரையின் மேல் கட்டியிருந்த கயிற்றை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பயத்தில் குதிரையுடனே சென்று கொண்டிருந்தார்.
குதிரையை துரத்திச் சென்ற உறவினர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைதூரம் சென்ற பிறகே, குதிரையை மடக்கிப்பிடித்து மணமகனை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் குதிரைக்கும், மணமகனுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பின்னர் மணமகனை தங்களது வாகனத்தில் அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். பின்னர், மணமகளுடன் மணமகனுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண ஊர்வலத்திற்கு குதிரையில் அழைத்து வரப்பட்ட மணமகன், பட்டாசு வெடி சத்தத்தால் அலறியடித்து ஓடிய குதிரையால் திருமண வீடு சிறிது நேரம் பரபரப்பானது. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒரு நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுபோன்று திருமண ஊர்வலங்களின்போதும், திருமணங்களின்போதும் நகைச்சுவையான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது. அந்த வரிசையில் இந்த சம்பவமும் திருமண பரிதாபங்கள் லிஸ்டில் இணைந்துள்ளது.