தேனி, கேரளாவில் கனமழை: வீடு இடிந்து சேதம்! அவசர உதவி எண்கள் அறிவிப்பு, ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
கேரளா இடுக்கி மாவட்டத்தில் நேற்று விடுக்கப்பட்ட கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' இன்றும் தொடர்வதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் அதனை ஒட்டி உள்ள போடி, தேவாரம், பெரியகுளம் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், போடி திருவள்ளுவர் சிலை அருகே கீழ ராஜவீதியில் சலவைத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் பெய்த கன மழை காரணமாக கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று இடிந்து சேதம் ஆனது. இதில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் பராமரிப்பு இல்லாத வீடுகளில் பொதுமக்கள் தவிர்த்து, பாதுகாப்பான பகுதிகளில் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற பராமரிப்பு இல்லாத வீடுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அந்தந்த பகுதி வட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு பொதுமக்களுக்கு மழைக்கால 24 மணி நேர அவசர உதவி எண்களையும் வெளியிட்டுள்ளனர். பெரியகுளம், உத்தமபாளையம், தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட தாலுகா வாரியாக மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பதிப்புகள் குறித்து 04546 - 261096 என்ற தொலைபேசி எண் மற்றும் 9487771077 என்ற வாட்ஸ் ஆப் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களுக்கு அந்தந்த தாலுகா வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் அருகில் உள்ள அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவ மழை நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்தது. இருப்பினும் மாநிலத்தில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி இடுக்கி உட்பட எட்டு மாவட்டங்களுக்கு நேற்று பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' ஏற்கனவே விடுக்கப்பட்ட நிலையில், இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்தது. திருவனந்தபுரம் உட்பட ஏழு மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவெளி விட்டு பலத்த மழை பெய்தபடி இருந்தது. இம்மாவட்டத்திற்கு' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால், வழக்கம் போல் சுற்றுலா படகுகள் உட்பட நீர்நிலை சுற்றுலாக்கள் நிறுத்தப்பட்டன. இன்றும் (அக். 17) கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















