பிரச்சாரத்தின்போது மோசமான உடல்நிலை; கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி!
கர்நாடக தேர்தல் காரணமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குமாரசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோர்வு மற்றும் பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எச்.டி. குமாரசாமியின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்.டி. குமாரசாமி மருத்துவமனையில் அனுமதி:
கர்நாடக தேர்தல் காரணமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் குமாரசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஓய்வு எடுக்குமாறு அவருக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குமாரசாமியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, நேற்று மாலை பெங்களூரு பழைய விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் டாக்டர் சத்தியநாராயணாவின் கவனிப்பில் எச்.டி.குமாரசாமி அனுமதிக்கப்பட்டார்.
சோர்வு மற்றும் பலவீனத்தின் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர் உடல்நிலை சீராகி உள்ளது. சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்காக மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் குமாரசாமி. இந்த சூழலில், அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது அவரது கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கவலைப்பட வேண்டாம். ஓய்விற்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பேன். குமாரசாமிக்கு முன்பு இதயம் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல் முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
கர்நாடக அரசியல் சூழல்:
கர்நாடகாவை பொறுத்தவரையில் மூன்று முக்கிய கட்சிகள் உள்ளன. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பழைய மைசூரு பகுதியில் செல்வாக்கு மிக்க கட்சியாக உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம். பொதுவாக, இந்த மூன்று அரசியல் கட்சிகளை சுற்றிதான் அரசியல் நகர்வு மேற்கொள்ளப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை பாஜக அதிகமாக நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது