Crime: குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி - இந்த கொடூரத்தின் பின்னணி என்ன?
பிப்ரவரி 10ம் தேதி காணாமல் போன எட்டு வயது சிறுமி ஹிசார் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குப்பைத் தொட்டியில் சடலமாக மீட்பு:
ஹரியானாவில் பிப்ரவரி 10 ஆம் தேதி காணாமல் போன எட்டு வயது சிறுமி ஹிசார் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததாக போலீசார் கூறினர்.
அவரது உடல் சிவில் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அந்த சிறுமியின் குடும்பத்தினர் குற்றவாளியை கைது செய்து தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னணி என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தனது மகள் பிப்ரவரி 10ம் தேதி சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறியுள்ளார். அவரை அழைத்த தனது மனைவியிடமிருந்து சிறுமியைக் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது, அதன் பிறகு அனைவரும் சிறுமியை தேடத் தொடங்கினர். மேலும் அதன் விசாரணையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் சந்தேகத்திற்குரிய ஒருவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஹிசார் பகுதியைச் சேர்ந்த அந்த குற்றவாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் நடந்த கொடூரம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள 28 வயதான பெண் நேற்றிரவு தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி நல்லாளம் கூட்டு சாலையில் திண்டிவனம் செல்ல பேருந்திற்காக நின்றிருந்தார். அங்கு வந்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் மகன் சுகன்ராஜ் தான் திண்டிவனம் சவாரி செல்வதாகவும், அங்கு சென்று அந்தப் பெண்ணை விட்டுவிடுவதாகவும் கூறி ஆட்டோவில் ஏறுமாறு கூறியதால் அதனை நம்பி அந்தப் பெண்மணியும் ஆட்டோவில் ஏறி உள்ளார். இதனைப் பயன்படுத்தி ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் பெருமுக்கல் மலைக்குச் செல்லும் மண் பாதையை ஒட்டிய முட்புதரில் அந்தப் பெண்மணியை கீழே இறக்கி பாலியல் அத்துமீறலில் முயன்றுள்ளார்.
உடனே அந்த பெண்மணி ஆட்டோ டிரைவரை அடித்து விட்டு அங்கிருந்து தப்பிய நிலையில் கணவருக்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு வந்த பெண்ணின் கணவர் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஆட்டோ டிரைவர் சுகன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்னர். குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகன்ராஜ் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.