"கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா" ஒரே நாளில் இரண்டு விருதுகளை பெற்ற பிரதமர் மோடி!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உதவியதற்காகவும் இரு நாட்டு உறவை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகா நாடுகள் விருதுகளை வழங்கியுள்ளன.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு இரண்டு நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதை வழங்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உதவியதற்காகவும் இரு நாட்டு உறவை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இரண்டு விருதுகள்:
கரீபியன் நாடுகளில் ஒன்றான கயானாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரசு மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலி, கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்" விருதை வழங்கினார்.
பிரதமரின் தொலைநோக்கு ராஜதந்திரம், உலக அரங்கில் வளரும் நாடுகளின் உரிமைகளை வென்றெடுத்தல், உலக சமூகத்திற்கு சிறப்பான சேவை, இந்தியா-கயானா உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கயானாவின் மிக உயர்ந்த தேசிய விருதைப் பெறும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
மோடி பெற்ற விருதுகள்:
அதேபோல, டொமினிகா அதிபர் ல்வானி பர்டன் அந்நாட்டின் மிக உயரிய தேசிய விருதான "டொமினிகா கௌரவ விருதை" பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளார். ராஜதந்திரம், கோவிட் 19 பெருந்தொற்றின் போது டொமினிகாவுக்கு அளித்த ஆதரவு, இந்தியா மற்றும் டொமினிகா உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் உறுதிப்பாடு ஆகியவற்றிற்காக, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக உழைத்ததற்காகவும், உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் மிக உயர்ந்த குடிமகன் விருதை பப்புவா நியூ கினியா வழங்கியது.
கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்து பிஜியின் உயரிய விருது வழங்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு எபகல் விருதை அந்நாட்டு ஜனாதிபதி சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் வழங்கினார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பரில் பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் ட்ருக் கியால்போவை பூடான் வழங்கி கௌரவித்தது. சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் சாதனைகளை படைத்ததற்காகவும் அமெரிக்க பாதுகாப்பு படை இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.