குஜராத் தேர்தல் நெருங்கும் நேரம்: காங்கிரஸில் மகனுடன் இணைந்த பாஜக முன்னாள் அமைச்சர்!
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.
குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.
அவரது மகன் சமீரும் தந்தையுடன் காங்கிரஸில் இணைந்தார். ஜெய் நாராயண் வியாஸ், கடந்த 5-ஆம் தேதி தனிப்பட்ட காரணங்களை கூறி பாஜகவிலிருந்து விலகினார். எனினும், சிந்த்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறேன். ஆனால், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட மாட்டேன் என்று வியாஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இந்த முறை இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 89 தொகுதிகளில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதியும், 93 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அக்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேநேரம், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியும் முனைப்பு காட்ட, குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம், காந்திநகரில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அதில் பெண்களை குறி வைத்து பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இலவச திட்டங்களை அறிவித்துள்ள பாஜக
அதன்படி, ஆரம்பப் பள்ளி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு தரமான இலவச கல்வி வழங்கப்படும். தகுதியான கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார இருசக்கர வாகனம் வழங்கப்படும். மகளிர் மற்றும் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். துவாரகாவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை நிறுவப்படும் மற்றும் குஜராத் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 20,000 அரசுப் பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கல்விக்காக ஜிஐடி உருவாக்கப்படும்
தீவிரவாத எதிர்ப்பு உருவாக்கப்பட்டு அச்சுறுத்தல்களை அகற்றுவதோடு, தீவிரவாத குழுக்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் ஸ்லீப்பர் செல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்படுவர். சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். பொது சொத்துக்களை சேதப்படுத்தும் மற்றும் தனியார் சொத்துக்களை தாக்கும் சமூக விரோதிகளிடமிருந்து மீட்பது தொடர்பான சட்டம் உருவாக்கப்படும். குஜராத் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை நிறுவுவது மட்டுமின்றி, 20,000 அரசுப் பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக மாற்றப்படும். 2036 இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நோக்கத்துடன் குஜராத் ஒலிம்பிக் மிஷனைத் தொடங்கவும், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு உட்கட்டமைப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.