பள்ளிகளில் பகவத் கீதை.. இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு..!
பள்ளிப்படிப்பில் பகவத் கீதை கட்டாயம் என்ற குஜராத் மாநில அரசின் முடிவை நிறுத்தி வைக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பள்ளிப்படிப்பில் பகவத் கீதை கட்டாயம் என்ற குஜராத் மாநில அரசின் முடிவை நிறுத்தி வைக்க முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
பகவத் கீதை கட்டாயம்:
குஜராத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் 2022-2023ம் கல்வியாண்டில் கட்டாயம் என்று, குஜராத் கல்வித் துறை கடந்த மார்ச் 17ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. குஜராத் கல்வித்துறையின் இந்த அறிக்கையானது தேசியப் கல்விக் கொள்கை 2020க்கு எதிரானது என்று கூறி ஜாமியத் உலமாக் இ ஹிந்த் குஜராத் மற்றும் ஜாமியத் உலமா நல அறக்கட்டளையும் இணைந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
அந்த மனுவில் குஜராத் அரசின் இந்த முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குஜராத் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றும் குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் போன்ற பிற சட்டப்பூர்வ அமைப்புகளால் பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்போது, அதற்கான ஆணையை வழங்க மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளதா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டது.
நீதிமன்றத்தில் வாதம்:
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மிஹிர் ஜோஷி ஆஜரானார். அப்போது, அரசின் இந்த கொள்கை முடிவானது இந்திய அரசியலமைப்புச்ச் சட்டம் 25 மற்றும் 51ஏ(எஃப்)ற்கு எதிரானது என்று வாதிட்டார். மேலும், ஒரு புனித நூலை இந்த வகையில் பரிந்துரைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியக் கலாச்சாரத்தின் மதிப்புகள் மற்றும் கொள்கைகள் வேறுபடும்போது, ஒரு சமய நூலுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி என்று வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சிஜே குமார் “வேறு எதையும் சேர்க்கக் கூடாது” என்று பள்ளிக்கல்வித்துறை கூறவில்லையே என்றார்.
இடைக்காலத் தடை கோரிக்கை:
அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ஜோஷி கேட்டுக்கொண்டார். “தேசியக் கல்விக் கொள்கையானது, பஞ்சதந்திரம் போன்ற கதைகளுடன் கூடிய கொள்கைகள் மற்றும் தத்துவங்கள் என்று எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. பாடத்திட்டம் மற்றும் அதிகார வரம்பு அம்சத்தைப் பொறுத்த வரை, ஒருப் பாடத்திட்டத்தை உருவாக்கி அதை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு உள்ளது என்று அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது” என்று ஜோஷி வாதிட்டார்.
தடை விதிக்க மறுப்பு:
“அத்தகைய வாதங்களுக்கு பதிலளிக்கும் அரசாங்கத்தின் பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தின் பதிவில் இருந்தால் மட்டுமே அதனை பரிசீலிக்கும்” என்று நீதிமன்றம் கூறியதோடு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டதோடு, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.