GUJARAT ELECTION: முன்ன மாதிரி இல்ல, நாங்க இப்ப தேசிய கட்சிப்பா..! - அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து
குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறிவிட்டதாக, அதன் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி இமாச்சல பிரதேசத்திலும், டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டமாக குஜராத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணி, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்துள்ள இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில் கலவையான முடிவுகளே வெளியாகியுள்ளன. குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக வெற்றி வெற்ற நிலையிலும், இமாச்சல பிரதேசத்தில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
5 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி:
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 157 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் வரலாறு படைத்துள்ளது பாஜக. குஜராத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில் இந்த மாதிரியான அதிக இடங்களில் வேறு எந்த கட்சியும் வெற்றி பெற்றதே இல்லை. இதனிடையே, காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், குஜராத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதோடு, குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 12.92 சதவீத வாக்குகளை பெற்று உள்ளது. இதன் மூலம் குஜராத் சட்டமன்ற தேர்தலில், மூன்றாவது பெரிய கட்சி எனும் பெருமையை பெற்றுள்ளது. ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கோவாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சி தடம் பதித்துள்ளது. இதன்மூலம் தேர்தல் ஆணைய விதிகளின்படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது.
राष्ट्रीय पार्टी बनने पर आम आदमी पार्टी के सभी कार्यकर्ताओं और सभी देशवासियों को बधाई। pic.twitter.com/sba9Q1sz1f
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 8, 2022
அர்விந்த் கெஜ்ரிவால் பெருமிதம்:
குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜரிவால் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி சிறிய கட்சியாக இருந்தது. தற்போது தேசியக் கட்சியாகி உள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதற்கு கட்சியின் தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். குஜராத் மக்களுக்கும் நன்றி. ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆவதற்கு குஜராத் மக்கள்தான் காரணம். தேர்தல் பரப்புரையின் போது வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. 13 சதவீத வாக்குகளைப் பெற்றதன் மூலம் நாங்கள் அந்தக் கோட்டைக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இதுவரை 40 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறோம் என, அர்விந்த் கெஜ்ரிவால் பேசினார்.
தேசிய கட்சி ஆவது எப்படி?
தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி ஆனது எப்படி?:
ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே டெல்லி, பஞ்சாப் மற்றும் கோவாவில் 6 சதவீத வாக்குகள் மற்றும் இரண்டு இடங்கள்' என்ற நிபந்தனையை நிறைவேற்றியுள்ளது. தற்போது குஜராத்திலும் சுமார் 13% வாக்குகளுடன், 5 தொகுதிகளில் வெற்றியும் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியால், 4 மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால், தேசிய கட்சியாகும் அங்கீகாரத்தை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.