Gujarat Elections 2022: குஜராத்தில் ஓங்கி ஒலிக்கும் அதிருப்தி குரல்...சுயேட்சையாக களமிறங்கிய 7 எம்எல்ஏக்கள்...கலக்கத்தில் பாஜக
வாய்ப்பு மறுக்கப்பட்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி இன்று சஸ்பெண்ட் செய்துள்ளது.
வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.
வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர்.
வாய்ப்பு மறுக்கப்பட்டு சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி இன்று சஸ்பெண்ட் செய்துள்ளது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 7 எம்எல்ஏக்களும் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நர்மதா மாவட்டத்தில் உள்ள நந்தோட்டைச் சேர்ந்த ஹர்ஷத் வாசவா உள்ளிட்ட 7 முக்கிய நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜுனாகத்தில் உள்ள கேஷோத் ஜூனாகத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட அரவிந்த் லதானியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சுரேந்திரநகரில் உள்ள தங்கத்ராவைச் சேர்ந்த சத்ரசிங் குஞ்சாரியா, வல்சாத்தில் உள்ள பாரடியைச் சேர்ந்த கேதன் பாய் படேல், ராஜ்கோட் கிராமத்தைச் சேர்ந்த பாரத் பாய் சாவ்தா, கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள வெராவலைச் சேர்ந்த உதய் பாய் ஷா மற்றும் கரண் பாய் பரையா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. தொடர்ந்து ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்ள பல்வேறு மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இளைஞர்களுக்கும் புதிய முகங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என கட்சிக்குள் பேசப்பட்டு வந்தது.
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி, முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் மற்றும் இரு மூத்த தலைவர்களான பூபேந்திரசிங் சுடாசமா மற்றும் பிரதீப்சிங் ஜடேஜா ஆகியோர் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
தற்போது, 182 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், காங்கிரசை சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகியதால், பாஜவின் பலம், 111 ஆக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி கடும் போட்டி அளிக்கும் என்றும் கருத்துக்கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது.