குஜராத்தில் அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் பாஜக... காங்கிரஸின் தோல்விக்கு ஆம் ஆத்மி காரணமா?
கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் வரலாறு படைத்துள்ளது பாஜக. இதுவரை நடைபெற்ற தேர்தலில் இந்த மாதிரியான அதிக இடங்களில் வேறு எந்த கட்சியும் வெற்றி பெற்றதே இல்லை.
கடந்த 1985ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 149 தொகுதிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது, அதை முறியடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.
அதில், 154 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 6 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பலத்த போட்டி காணப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் அது சற்று குறைவாகவே இருந்தது.
2017 தேர்தலில், 99 தொகுதிகளில் பாஜகவும் 78 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றிருந்தது. ஆனால், இந்த முறையோ முடிவுகள் முழுவதுமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் ஆம் ஆத்மி ஏற்படுத்திய தாக்கம் என்றே கூறப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே இடையே நிலவிய மும்முனை போட்டி இறுதியில் பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.
பொதுவாக நகர்ப்புற தொகுதிகளை பொறுத்தவரை, பாஜக பலம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் காங்கிரஸ் அதிக பலத்துடன் காணப்படும். ஆனால், இந்த முறை நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் பாஜகவே வெற்றிபெற்றுள்ளது.
தொடக்கத்தில், பாஜகவில் கடும் உட்கட்சி பூசல் நிலவி வந்தது. மூத்த அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் காரணமாக, அவர்கள் சுயேட்சையாக களமிறங்கி இருந்தனர். எனவே, அது பாஜகவுக்கு பாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள், பாஜக மாநில முதலமைச்சர்கள் என ஒட்டுமொத்த பாஜக மேலிடமும் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால், வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக பிரச்சாரம் செய்து வந்தது. அதன் விளைவாக, பாஜக அசுர வெற்றியை பதிவு செய்துள்ளது.
புதிய முகமாக களமிறங்கிய ஆம் ஆத்மியும் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. அதன் எதிரொலியாகவே பல இடங்களில், ஆம் ஆத்மி நல்ல வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால், இது காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பை பல இடங்களில் பறித்துள்ளது.
முன்னதாக, வெளியான கருத்துகணிப்புகளிலும், பாஜகவே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார்போல, இந்த முடிவுகள் அமைந்துள்ளன.