Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: உலகப் பிரிசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. காளைகளும், காளையர்களும் இந்த போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

தமிழர்களின் மிகவும் முக்கிய விசேஷமான பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்றாலே கரும்பு, சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றுடன் முதன்மையாக நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு.
தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டே மக்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். மதுரை மாவட்டத்தின் இந்த 3 இடங்ளிலும் நடக்கும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றது ஆகும்.
தை முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம். இதன்படி. இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 2 ஆயிரத்து 26 காளைகள், 1735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் விழாக்கமிட்டி சார்பில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
சீறிபப்பாயும் காளைகளும், காளையர்களும்:
இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவது வழக்கம். மதுரை மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, திருச்சி என அண்டை மாவட்டங்களில் இருந்தும் இந்த போட்டியை காண பார்வையாளர்கள் குவிவது வழக்கம். இரவு 7 மணி வரை நடக்கும் இந்த ஜல்லிக்கட்டு சுற்றுகள் வாரியாக நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் 50 காளைகள் அவிழ்த்துவிடப்படும்.
மது அருந்திவிட்டு வருபவர்கள், காளைகளுக்கு மது ஊற்றியிருந்தால் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படும். மேலும், மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கம் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். களத்தில் காயம் அடையும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
என்னென்ன பரிசு?
ஆள் மாறாட்ட குற்றச்சாட்டைத் தடுக்கும் வகையில் வீரர்களுக்கும், மாடுகளுக்கும் க்யூ ஆர் கோடு அச்சிடப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார், மோட்டார் சைக்கிள், தங்கச்சங்கிலி, தங்க மோதிரம், பீரோ, கட்டில் ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளது.
பார்வையாளர்கள் பாதுகாப்பு கருதி போதிய அளவு பாதுகாப்பு அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேலரி, குடிநீர் வசதி, கழிவறை வசதி, மருத்துவ வசதி அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.





















