Gujarat Election: குஜராத் சட்டசபைத் தேர்தல் - ரூபாய் 290 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்..!
குஜராத் மாநிலத்தில் 290 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இலவசப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
![Gujarat Election: குஜராத் சட்டசபைத் தேர்தல் - ரூபாய் 290 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்..! Gujarat Cash Drugs Liquor Worth Rs 290 Crore Seized Recoveries Over 10 Times Made In 2017 Gujarat Election: குஜராத் சட்டசபைத் தேர்தல் - ரூபாய் 290 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/30/a14a75ce88246fabd159f29a121f3d311669825539783574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
குஜராத் மாநிலத்தில் நாளை முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 290 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கம், போதைப்பொருள், மதுபானம் மற்றும் இலவசப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2017ஆம் ஆண்டு மீட்கப்பட்ட பொருள்களை விட 10 மடங்கு அதிகம் என பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை முதற்கட்டமாக சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 இடங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில், 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
பா.ஜ.க. உட்கட்சி பூசல்:
முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். இதனால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி சஸ்பெண்ட் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
காங்கிரஸ்- பா.ஜ.க.
1995ஆம் ஆண்டுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புறங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது.
ஆளும் பாஜக, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், குஜராத் அரசியலில் புதிதாக குதித்துள்ள ஆம் ஆத்மி ஆகியவை ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து தாக்கி கொண்டன. இருப்பினும், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் பிரச்சாரம் சற்று மந்தமாகவே இருந்தது.
மொத்தம் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)