Gujarat election: தேர்தலுக்கு தயாராகும் குஜராத்... வரலாறு படைக்கப்போவது பாஜகவா? காங்கிரஸா? - கள நிலவரம் இதுதான்!
கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
வரும் டிசம்பர் 8ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்துடன் இணைத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். முக்கிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.
வேட்பாளர்கள் தேர்வை பொறுத்தவரை, முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், 5 அமைச்சர்கள், சபாநாயகர் உள்பட 42 எம்எல்ஏகளுக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளது. இதன் காரணமாக, கடும் உட்கட்சி பூசலில் பாஜக சிக்கி தவித்து வருகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பலர் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். இதனால், சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த பாஜகவின் 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சி சஸ்பெண்ட் செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கிட்டத்தட்ட 25ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், ஏழாவது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வரலாறு படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆட்சிக்கு எதிரான மனநிலையை எதிர்கொள்ள பல்வேறு மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்துள்ளது.
1995க்கு பிறகு, காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் ஆட்சி அமைக்கவே முடியவில்லை. ஆனால், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே, பாஜக 99 இடங்களையும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் 77 இடங்களையும் கைப்பற்றியது. பல ஆண்டுகளாகவே, கிராமப்புரங்களை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி வலுவாக காணப்படுகிறது.
ஆனால், நகர்ப்புறங்களில் காங்கிரஸ் வலுவிழந்தே காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஆம் ஆத்மி கட்சி போட்டியில் குதித்து இருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு சற்று சவாலாகவே மாறியுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல், வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனு திரும்பப்பெறல் ஆகியவை முடிந்துள்ளன. இந்த சூழ்நிலையில், அங்கு 1,621 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் கட்ட தேர்தலை 788 வேட்பாளர்களும், இரண்டாவது கட்ட தேர்தலை 833 வேட்பாளர்களும் எதிர்கொள்கின்றனர்.
ஆளும் பாஜக அனைத்து தொகுதிகளிலும் (182) வேட்பாளர்களை களம் இறக்கி உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 3 இடங்களை கூட்டணிக்கட்சியான சரத் பவாரின் தேசியவாதக்காங்கிரசுக்கு ஒதுக்கி விட்டு எஞ்சிய 179 இடங்களிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கோப்சிங் லாவர், தேவ்காத் பரியா தொகுதியில் தனது வேட்புமனுவைத் திரும்பப்பெற்றுள்ளார்.
எனவே தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 182 இடங்களிலும் போட்டி போடுவதாக அறிவித்தது. ஆனால், அதன் வேட்பாளர் சூரத் கிழக்கு தொகுதியில் வேட்புமனுவை திரும்ப பெற்றதால், அந்தக் கட்சி 181 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
மக்களவை உறுப்பினர் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 14 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. ஆனால், அதன் வேட்பாளர் பாபுநகர் தொகுதியில் வேட்பு மனுவை திரும்பப்பெற்றுள்ளதால் 13 இடங்களில் மட்டுமே அக்கட்சி போட்டியில் உள்ளது.
இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 4 கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 765 ஆகும். பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் (2 கோடியே 37 லட்சத்து 51 ஆயிரத்து 738), ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம். 2 கோடியே 53 லட்சத்து 36 ஆயிரத்து 610 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 1,417 பேர் இந்த மாநிலத்தில் வாக்காளர்களாக உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

