”கொரோனா தடுப்பு நிவாரண பொருட்களின் இறக்குமதிக்கு வரிவிலக்கு கொடுக்கப்படும்” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கொரோனா தடுப்பூசிகளுக்கான வரியை இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூடத்தில் குறைக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்தவுடன் ஒவ்வொரு பொருளாதார காலாண்டிலும் ஒரு முறையாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம். எனினும் கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறவில்லை. இந்தச் சூழலில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான பொருட்களின் மேல் உள்ள வரிகள் தொடர்பாக கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான நிவாரண பொருட்களுக்கு வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் அம்போடெரிசின்-பி மருந்துக்கும் இந்த விலக்கு பொருந்தும். அத்துடன் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வரி தொடர்பான விஷயத்தை நாளை ஒரு அமைச்சர்கள் குழு உருவாக்கப்படும்.
இந்த குழு விரைவாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்யும். அதன்பின்னர் இந்த விஷயங்களின் வரி குறித்து முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஏன் கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு உடனடியாக வரி விலக்கு அல்லது வரி குறைப்பு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு கொடுக்கும் தடுப்பூசி இலவசமாக தான் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகளை மாநிலங்கள் இலவசமாக தான் மாநில அரசுக்கு தருகிறது. மேலும் மாநில அரசுகள் 25 சதவிகித தடுப்பூசிகள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்கின்றன. மீதமுள்ள 25 சதவிகிதத்தை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்கின்றன. எனவே மத்திய அரசு மூலம் இலவசமாக தான் தடுப்பூசி கொடுக்கப்பட்டு வருகிறது. அதை இன்னும் மத்திய அரசு நிறுத்தவில்லை" எனப் பதிலளித்தார்.
அத்துடன் இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றை மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் தான் அதிகமாக வாங்குகின்றனர். மாநில அரசுகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்ட் வரி திரும்ப தரப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கும் மட்டும்தான் அந்த வரி திரும்ப தரப்படாது. எனவே இந்த வரி குறைப்பால் மக்களுக்கு நேரடியாக எந்தவித பயனமும் இல்லை. அதன் காரணமாக உடனடியாக தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வரி குறைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.