கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள்..மத்திய அரசு அறிவிப்பு!
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. இருப்பினும், இது கோதுமை மாவுக்கான வெளிநாட்டு தேவையை அதிகரித்தது.
கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவின்படி "அரசு உடனடியாக கோதுமை மாவின் ஏற்றுமதிக்கு ஒரு தடையை விதிக்க அனுமதிக்கும், இது கோதுமை மாவின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் மற்றும் சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்" என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (DGFT) இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Cabinet Committee on Economic Affairs has approved the proposal for amendment of the policy of exemption for Wheat or Meslin Flour from export restrictions: CCEA pic.twitter.com/NcbwDBboEY
— ANI (@ANI) August 25, 2022
ரஷ்யாவும் உக்ரைனும் கோதுமையின் முக்கிய ஏற்றுமதியாளர்கள், உலக கோதுமை வர்த்தகத்தில் நான்கில் ஒரு பங்கைக் இந்த இரு நாடுகள் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உலக கோதுமை விநியோகச் சங்கிலியில் தடங்கலுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் இந்திய கோதுமைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. இருப்பினும், இது கோதுமை மாவுக்கான வெளிநாட்டு தேவையை அதிகரித்தது. இந்தியாவில் இருந்து கோதுமை மாவு ஏற்றுமதி 2022 ஏப்ரல்-ஜூலை மாத காலத்தை 2021 ஆம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 200 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு சந்தையில் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
"முன்னர், கோதுமை மாவு ஏற்றுமதியை தடை செய்யவோ அல்லது தடை விதிக்கவோ கூடாது என்ற கொள்கை இருந்தது. எனவே, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கோதுமை மாவுக்கான ஏற்றுமதி மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு மற்றும் கொள்கையில் ஒரு பகுதி மாற்றம் தேவைப்பட்டது. மேலும் நாட்டில் கோதுமை மாவு விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தவும் இது வழிவகையாக இருக்கும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.