10 Lions : சாதுர்யமாக பிரேக் போட்ட ரயில் ஓட்டுநர்.. டிராக்கில் இருந்த 10 சிங்கங்களை காப்பாற்றியது எப்படி?
Goods Train: குஜராத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு 10 சிங்கங்களின் உயிரை காப்பாற்றியுள்ளார். தண்டவாளத்தில் சிங்கங்களை பார்த்தவுடன் அவசர பிரேக்கை போட்டுள்ளார்.
ரயில்களை நவீனப்படுத்துவதாக கூறி வந்தே பாரத் ரயில் சேவையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ரயில்வே போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரு பக்கம் நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மற்றொரு புறம் ரயில் விபத்துகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்தாண்டு ஒடிசா ரயில் விபத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. மேற்குவங்கத்தில் இன்று நடந்த ரயில் விபத்தால் 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டி: இப்படிப்பட்ட சூழலில், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குஜராத்தில் சரக்கு ரயில் ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு 10 சிங்கங்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
அம்ரேலி மாவட்டம் பிபாவாவ் துறைமுகம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 10 சிங்கங்கள் இருந்துள்ளது. அந்த வழியே வந்த சரக்கு ரயில் ஓட்டுநர் இதை பார்த்துள்ளார். சாதுர்யமாக செயல்பட்ட அவர் அவசர பிரேக்கை போட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு ரயில்வேயின் பாவ்நகர் பிரிவு விரிவாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. "முகேஷ் குமார் மீனா என்பவர் பிபாவாவ் துறைமுக நிலையத்தில் இருந்து சரக்கு ரயிலை இயக்கி வந்துள்ளார். தண்டவாளத்தில் 10 சிங்கங்கள் இருப்பதை கண்டதும் மீனா அவசரகால பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார்.
நடந்தது என்ன? சிங்கங்கள் எழுந்து தண்டவாளத்தை விட்டு நகரும் வரை அவர் காத்திருந்தார். பின்னர் செல்ல வேண்டிய இடத்திற்கு ரயிலை இயக்கி சென்றுள்ளார். லோகோ பைலட்டின் (ஓட்டுநர்) இந்த பாராட்டுக்குரிய பணி அதிகாரிகளால் பாராட்டப்பட்டது" என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சிங்கங்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக பவானிசாகர் ரயில்வே பிரிவு சார்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிவுறுத்தப்பட்டபடி, இந்த வழித்தடத்தில் உள்ள லோகோ பைலட்டுகள் விழிப்புடன் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புக்கு ஏற்ப ரயில்களை இயக்குகின்றனர்" என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபாவாவ் துறைமுகத்தை வடக்கு குஜராத்தை இணைக்கும் இந்த ரயில் பாதையில் கடந்த சில ஆண்டுகளில் பல சிங்கங்கள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிர் வனவிலங்கு சரணாலயத்தின் வெளிப்புற சுற்றளவில் இருந்து கணிசமான தொலைவில் துறைமுகம் அமைந்திருந்தாலும், சிங்கங்கள் இந்தப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.
ரயில்களில் சிங்கங்கள் அடிபடாமல் இருக்க தண்டவாளத்தில் போதுமான வேலிகளை சீரான இடைவெளியில் அமைத்துள்ளனர் மாநில வனத்துறையினர்.