G20 Summit 2023: தொடங்கிய ஜி20 மாநாடு...ஒன்றுகூடிய உலக தலைவர்கள்...பரபர மீட்டிங்..!
'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளுடன் டெல்லியில் ஜி20 மாநாடு தொடங்கியது.
G20 Summit 2023: 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளுடன் டெல்லியில் ஜி20 மாநாடு தொடங்கியது.
தொடங்கிய ஜி20 மாநாடு:
'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளுடன் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மாநாடு தொடங்கும் முன், ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டதன் மூலம் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. இந்த மாநாட்டில், நாட்டின் பெயரை குறிக்க பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டுள்ள பலகையில் 'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரத்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி உரை:
இதனை தொடர்ந்து மாநாட்டில் பிரதமர் மோடி வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது, ”இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது, ”மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
இந்த கடினமான சூழ்நிலையில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. வளமான எதிர்காலத்திற்காக ஜி20 நாடுகள் இணைந்து செயல்படுவது அவசியம். அனைத்து மக்களையும் உள்ளடங்கிய வளர்ச்சி என்பதை இந்தியாவின் கொள்கை. வளமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நாம் உலக அளவில் எடுத்து செல்ல வேண்டும். உணவு, எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம் , இணைய பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்" என்றார் பிரதமர் மோடி.
"போரினால் இழந்த நம்பிக்கையை மீட்க வேண்டும்"
தொடர்ந்து பேசிய அவர், "உலகிற்கு புதிய பாதையை காட்டுவதில் 21ஆம் நூற்றாண்டு ஒரு முக்கிய காலமாகும். நாம் அனைவரும் புதிய சவால்களை நோக்கி சென்றிருக்கிறோம். எனவே, நமக்கான பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கொரோனாவை நம்மால் வெல்ல முடிந்தது. அதேபோல, போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையும் நம்மால் வெல்ல முடியும்” என்றார் பிரதமர் மோடி.