Tiger Cubs Saved : வயல்வெளியில் தாய் புலியை பிரிந்து தவித்த குட்டிகள்.. கிராம மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்..
ஆத்மகுரு வனப் பகுதிக்கு உட்பட்ட கும்மாடபுரம் கிராமத்தில் நான்கு புலிக்குட்டிகளை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
விலங்குகள் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. மனித - வனவிலங்கு மோதல்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும்பாலும் வன விலங்கு வசிப்பிடத்தில் நிகழும் ஆக்கிரமிப்பு, வாழ்விட சீரழிவு உள்ளிட்டவற்றால் ஏற்படுகிறது.
மனித - வனவிலங்கு மோதல்கள்:
வனப் பொருட்களை சட்ட விரோதமாக எடுக்க செல்லும் மனிதர்களை வனத்துறை கண்காணித்து தடுக்க வேண்டும். வனப்பகுதிகளில் இருந்து மனித நடமாட்டம் உள்ள நிலப்பரப்புகளுக்கு உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
வனப்பகுதிக்குள் விலங்குகளுக்கு தேவையான நீர்நிலைகள் மற்றும் உணவுத் தேவை கிடைப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், மனித - வனவிலங்கு மோதல்களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டு வருகின்றனர்.
வயல்வெளியில் தாய் புலியை பிரிந்து தவித்த குட்டிகள்:
இந்நிலையில், ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் 4 புலிக்குட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆத்மகுரு வனப் பகுதிக்கு உட்பட்ட கும்மாடபுரம் கிராமத்தில் நான்கு புலிக்குட்டிகளை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
நாய்களின் தாக்குதலில் இருந்து குட்டிகளை பாதுகாக்க கிராம மக்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தனக். பின்னர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புலிக்குட்டிகளை மீண்டும் தாயுடன் இணைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், குட்டிகளை தேடி பெரிய புலி கிராமத்திற்கு வந்துவிடுமோ என கிராம மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் தலைமை வன பாதுகாவலர் விளக்கம்:
இதுகுறித்து ஆந்திர வனத்துறையின் கூடுதல் தலைமை வன பாதுகாவலர் சாந்தி பிரியா பாண்டே கூறுகையில், "அடுத்த 24 அல்லது 48 மணி நேரத்தில் தாய் புலியை தேடி கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். தாய் புலி, குட்டிகளை மீண்டும் அழைத்து கொள்ள வேண்டும். அது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.
இல்லையெனில், அடுத்த என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். குட்டிகள் எப்படி அங்கு சென்றன என்பது இன்னும் நமக்கு ஒரு புதிராகவே உள்ளது. புலியை காட்டு நாய்கள் கூட்டமாக துரத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அவசரத்தில் அது குட்டிகளை விட்டு சென்றிருக்கலாம்.
நாம் அவற்றை சிறிது நேரம் வளர்த்து, பின்னர் அவற்றை மிருகக்காட்சிசாலைக்கு எடுத்துச் செல்கிறோமா அல்லது கூண்டில் அடைத்து வைக்க போகிறோமா? அதற்கு நிறைய அனுமதிகள் தேவை. தலைமை வனவிலங்கு காப்பாளர் தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என்று நெறிமுறை கூறுகிறது" என்றார்.