முதல் முறையாக மனம் திருந்தி வந்த மாவோயிஸ்ட் - அரவணைத்து தமிழக அரசு செய்த பலே காரியம்!
மனம் திருந்தி வாழும் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பிரபா(எ)சந்தியா என்ற பெண்ணிற்கு தமிழகத்தில் முதல் முறையாக ஆவின் பாலகம் அமைத்து கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளது தமிழக அரசு!
தமிழக அரசால் மாவோயிஸ்ட் அமைப்பானது இந்திய அரசால் தீவிரவாத இயக்கமாக 2009-ல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் மனம் திருந்தி சமுதாய வாழ்வில் இணைவதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்போது கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பிரபா (எ)சந்தியா வயது (40) இவர், மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல ஆயுதக்குழுவில் செயல்பட்டு வந்துள்ளார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சந்தியாவிற்கு திடிரென உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தான் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளரிடம் சந்தியா மனம் திருந்தியதால் கடந்த (18.12.2021) பிரபா (எ)சந்தியா சரணடைந்தார். அப்போது சந்தியாவை அரியூர் ஸ்ரீசாய் வசந்தம் என்ற இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவரின் மறுவாழ்விற்காக தமிழக அரசு ''சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் அரியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் அரியூரியூர் பகுதியில், ரூபாய் 1லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து கொடுக்கப்பட்டுது. அதன் துவக்க விழாவானது இன்று நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், ‘Q’-பிரிவு காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மாள், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.தீபா சத்யன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஆவின் பாலகத்தை திறந்து துவக்கி வைத்தனர்.
அப்பொழுது பேசிய அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பிரபாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று சமூக விரோத செயல்கள் மற்றும் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மனம் திருந்தி வருபவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நல திட்ட உதவிகளையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மனம் திருந்தி வந்த மாவோயிஸ்டுக்கு ஆவின் பாலகம் தமிழக அரசு அமைத்துக் கொடுத்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.