4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர்! நாடு முழுவதும் மாற்றுகிறதா மத்திய அரசு?
தெலங்கானா, உத்தரபிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஜன் போஷன் கேந்திரா என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது.
நாடு முழுவதும் நாட்டு மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு அரசு சார்பில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், பருப்பு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர்:
இந்த நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ஸ்ரீபிரகலாத் ஜோஷி நேற்று 60 நியாய விலைக் கடைகளின் பெயர்களை ஜன்போஷன் கேந்திராவாக மாற்றித் தொடங்கி வைத்தார். இந்த 60 நியாய விலைக்கடைகளும் குஜராத், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது.
முதற்கட்டமாக தற்போது இந்த நான்கு மாநிலங்களில் உள்ள 60 நியாய விலை கடைகளின் பெயர்கள் ஜன்போஷன் கேந்திராவாக மாற்றப்பட்டுள்ளது. ஜன்போஷன் கேந்திராவாக இந்த நியாய விலைக்கடைகள் மாற்றப்படுவதன் மூலமாக நியாய விலைக் கடைகளுக்கு தேவைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டு, நியாய விலைக்கடைகளின் வருவாய் அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஜன் போஷன் கேந்திரா:
ஜன் போஷன் கேந்திராவின் கீழ் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் என்றும், நியாய விலை கடைகளுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும் என்று கூறினார். முதற்கட்டமாக 4 மாநிலங்களில் உள்ள 60 நியாய விலைக்கடைகள் பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2047ம் ஆண்டு இந்திய வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை அடைய உணவு மற்றும் பொது விநியோகத் துறை முக்கிய பங்காற்றும் என்றும், நாட்டின் உணவுப் பாதுகாப்பின் வரம்பை அதிகரிக்க சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கபபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நியாய விலை கடைகளை ஜன் போஷன் கேந்திராவாக மாற்றும் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் நியாய விலை கடைகளுக்கான சாகாய் ஆப். மேரா ரேஷன் ஆப் 2.0 ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.