Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்! சென்னையில் இருந்து ஈஸியா போகலாம் - ஜனவரி 6 முதல் விமான சேவை!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள விமான நிலையம் வரும் 30ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 16.5 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
#WATCH | Uttar Pradesh: Beautification work underway in Ayodhya, ahead of the consecration ceremony of Ram temple on 22 January 2024. (22.12) pic.twitter.com/UdZp0XDERs
— ANI (@ANI) December 22, 2023
அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலில் 70 ஆயிரம் பேர் வரை ஒரு நேரத்தில் தரிசனம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். மேலும், 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மத தலைவர்களும், 136 மடாதிபதிகளும் பங்கேற்க உள்ளனர். கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அயோத்தி விமான நிலையம்:
இந்த நிலையில், அயோத்தி கோயிலை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையமும் கட்டப்பட்டுள்ளது. அதேபோல, சர்வதே தரத்தில் விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி விமான நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில், ஜனவர 6ஆம் தேதி முதல் அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது.
அதாவது, ஜனவரி 6ஆம் தேதி முதல் டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கோவா போன்ற முக்கிய நகரங்களில் இருந்து விமானம் இயக்கப்படும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதலில், டெல்லி மற்றும் அயோத்தி இடையே நேரடி விமானங்கள் இயக்க தொடங்கும். அதன்பிறகு அடுத்தடுத்து பெரும் நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்க தொடங்கும்.
ஜனவரி 6ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும். அதே விமானம், அயோத்தியில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 3 மணிக்கு டெல்லி சென்றடையும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கட்டணம் விவரம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.