Seat Sharing: அடுத்த அதிரடியில் இறங்கிய I.N.D.I.A கூட்டணி.. இறுதி செய்யப்படுகிறதா தொகுதி பங்கீடு?
I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மக்களவை பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவடைய உள்ளதால், மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பாகவே, 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
தேர்தலுக்கு தயாராகும் I.N.D.I.A கூட்டணி:
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம், பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்தான், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டப்பட்டது. இதை தொடர்ந்து, I.N.D.I.A கூட்டணியின் மூன்றாவது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் மும்பையில் நடைபெறே்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட்டு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் கூடிய விரைவில் முடிக்கப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்தது.
அதுமட்டும் இன்றி, ஒருங்கிணைப்பு, பிரச்சாரம், ஊடகம், சமூக ஊடகம் போன்றவற்றில் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்க தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம்:
இந்த நிலையில், I.N.D.I.A கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வீட்டில், இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கான கால அவகாசத்தை நிர்ணயிப்பதே இந்த கூட்டத்தின் முதல் நோக்கம் ஆகும்.
அதுமட்டும் இன்றி, கூட்டணிக்கான தேர்தல் அறிக்கை, ஒருங்கிணைந்து பேரணிகளை நடத்துவதற்கான தேதிகளை இறுதி செய்வது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட உள்ளது. ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவர் யாரும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த கூட்டத்திற்கு சரத் பவார் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "எங்களுக்கிடையே வேறுபாடுகள் இருக்கிறது. ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே தொகுதி பங்கீட்டில் ஏற்பாடு தேவை. இதில் பிகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் ஏற்கனவே தொகுதி பங்கீடு ஃபார்முலா இருக்கிறது" என்றார்.