சுதந்திர இந்தியாவின் முதல் அக்னி பரீட்சை.. தேர்தலை பற்றி தெரியாமலே வாக்களித்த மக்கள்!
ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்து வருகிறது. பெரிய வன்முறைகள் இன்றி, அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
![சுதந்திர இந்தியாவின் முதல் அக்னி பரீட்சை.. தேர்தலை பற்றி தெரியாமலே வாக்களித்த மக்கள்! First Election after Indian Independence From Congress Wave to rise of communist parties சுதந்திர இந்தியாவின் முதல் அக்னி பரீட்சை.. தேர்தலை பற்றி தெரியாமலே வாக்களித்த மக்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/10/671b14ea5c0819fed7272630c85111fe1723300183048729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலக சரித்திரத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும், அதில் சிலதுதான் பிற்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, வரலாற்று சம்பவமாக பதிவாகியிருக்கிறது. அந்த வகையில், அமெரிக்காவின் சுதந்திரம், பிரெஞ்சுப் புரட்சி, ரஷியா சமூக எழுச்சி என சிலவற்றை குறிப்பிடலாம். ஆனால், அந்தச் சம்பவங்களை எல்லாம் காட்டிலும் இந்தியா சுதந்திரமடைந்த சம்பவமே உலகத்தில் மகத்தான நிகழ்வாக குறிப்பிடப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் அக்னி பரீட்சை: இந்திய விடுதலையில் இருந்து உலகுக்கு கிடைத்த நம்பிக்கையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதோடு நின்றுவிடவில்லை. தொடர்ந்து அக்னி பரீட்சையில் இறங்குகிறது. அமெரிக்கா போன்ற உலகின் பழமைவாய்ந்த நவீன ஜனநாயக நாடுகளிலேயே ஆட்சி மாற்றம் வன்முறைகளுக்கு இடையே நடந்தேறியதை பார்த்தோம்.
ஆனால், ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்து வருகிறது. பெரிய வன்முறைகள் இன்றி, அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. சுதந்திர தினம் நெருங்கும் சூழலில், நமது நாட்டின் முதல் தேர்தலில் நடந்த சுவாரஸ்யமான சம்வபங்களை தெரிந்து கொள்வோம்.
சுதந்திரத்திற்கு பிறகு, 1951-52 காலக்கட்டத்தில் முதல் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது இருப்பது போல 18 வயதில் (1988ஆம் ஆண்டுக்கு பிறகுதான் 18 வயதான அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுகிறது) வாக்குரிமை அளிக்கப்படவில்லை.
முதல் தேர்தலில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்: அப்போது, 21 வயது அல்லது அதற்கு மேலான வயதுடையவர்களே வாக்களிக்க தகுதியானவர்கள். அப்போது, 17 கோடியே 60 லட்ச இந்தியர்கள், 21 வயதை நிரம்பியவர்களாக இருந்தனர். ஆனால், அதில் 85 சதவிகிதம் பேருக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. எனவே, அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்தது.
அதேபோல மக்களவையுடன் மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது. எனவே, சுகுமார் சென்னுடன் இணைந்து, பல்வேறு மாகாணங்களின் தேர்தல் ஆணையர்கள் பணியாற்றினர். பெரும் சவால்களுக்கு மத்தியில் 1951ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. பல்வேறு கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு, 1952ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி நாடு முழுமைக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் மொத்தம் 53 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. மொத்தம் 401 தொகுதிகள். சில தொகுதிகளில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் முறை பின்பற்றபட்டதால் (1960களில் இரண்டு வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது), மொத்தம் 489 இடங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 1874 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அனைவரும் எதிர்பார்த்தபடியே, நாட்டின் முதல் தேர்தலில் மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது. இரண்டாவது பெரிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (சிபிஐ) காட்டிலும் நான்கு மடங்கு அதிக வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருந்தது.
மொத்தம் 364 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜன சங் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. கிட்டத்தட்ட 45% வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)