Mumbai: மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்...
மும்பையில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்ரா மாநிலம் மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள எம்ஜி சாலைக்கு அருகில் உள்ள ஜெய் சந்தேஷ் என்ற 5 மாடி குடியிருப்புஇந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தரைதளத்தில் இருந்த பழைய பொருட்கள், நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களில் இருந்து தீ கிளம்பியதாக பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மேல் தளத்தில் குடியிருக்கும் மக்கள் இன்னல்களுக்கு மத்தியில் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு குடிசை மக்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் தீயணைப்பு கருவிகள் கூட கிடையாது. லிஃப்ட் வசதியும் சரியாக செயல்பாட்டில் இல்லாத நிலையில் அதன் வழியாக புகை மேலே பரவியதும் தான் தீ விபத்து பற்றி மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதனிடையே கோரேகான் தீ விபத்து குறித்து மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மும்பையின் கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மற்றும் உடைமை இழப்பு பற்றிய தகவல் அறிந்து வருத்தமடைந்தேன். நாங்கள் கிரேட்டர் மும்பை மாநகராட்சி மற்றும் மும்பை காவல்துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் தான் இருக்கிறோம். இதன் வழியாக அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "என் ஆழ்ந்த இரங்கல்கள்." மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.