Fatima Sheikh 191 | முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியை.. கல்விப் போராளி பாத்திமா ஷேக்கின் பிறந்தநாள்.. கொண்டாடிய Google..
தான் இல்லாவிட்டாலும் எல்லா வேலைகளையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கையாள்வார் என்று வெளிப்படையாக சாவித்ரி பூலே சொல்லியிருக்கிறார்.
இந்திய கல்வியாளரும் பெண்ணியவாதியுமான ஃபாத்திமா ஷேக்கின் 191-வது பிறந்தநாளில், கூகுள் அவரை நினைவு கூர்ந்து ஒரு டூடூல் ஆர்ட்டை முகப்பில் வைத்துள்ளது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரி பாய் புலேவை நினைவில் கொள்கிறோம். தான் இல்லாவிட்டாலும் எல்லா வேலைகளையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கையாள்வார் என்று வெளிப்படையாக சாவித்ரி பூலே சொல்லியிருக்கிறார் என்றால், அந்த பெண் எப்படிப்பட்ட முக்கியத்துவம் உள்ள பெண்ணாகத்தான் இருப்பார். அந்த மகத்தான பெண்தான் ஃபாத்திமா ஷேக். சாவித்ரி பாயின் பணியின் இணைந்து பங்காற்றியவர். கூகுள் இன்று (09/01/2022) கல்வியாளர் மற்றும் பெண்ணியத்தின் அடையாளமான பாத்திமா ஷேக்கின் 191வது பிறந்தநாளை அழகாக வடிவமைக்கப்பட்ட டூடுலுடன் கொண்டாடுகிறது.
இவர் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியை என்று பரவலாக அறியப்படுகிறார். தனது துறையில் "வாழ்நாள் சாம்பியன்" என்று போற்றப்பட்ட ஷேக், சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் மற்றும் சாவித்ரிபாய் ஃபுலே ஆகியோருடன் இணைந்து, 1848-ஆம் ஆண்டில் பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளிகளில் ஒன்றை நிறுவி அதற்கு சுதேச நூலகம் என்று பெயரிட்டார். வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் கலவையில் அழகான கூகிள் டூடுல் பின்னணியில் இரண்டு திறந்த புத்தகங்களுடன் ஷேக்கின் விளக்கப்படத்தையும் சேர்க்கிறது. டூடுல் எளிமையானது, ஆனால் ஷேக்கின் வாழ்க்கையை ஒரே பார்வையில் காட்டுகிறது. பாத்திமா ஷேக் 1831-ஆம் ஆண்டு புனேவில் இந்த நாளில் பிறந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கற்பித்ததற்காக தனது தந்தையே அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய பின்னர் அவர் தனது சகோதரர் உஸ்மானுடன் வசிக்கிறார். அங்கு சாவித்ரிபாய் ஃபுலே மற்றும் பாத்திமா ஷேக் ஆகியோர், மதம் அல்லது பாலினத்தின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தார்கள்.
சமத்துவத்திற்கான இந்த இயக்கத்தில் வாழ்நாள் சாதனையாளராக, பாத்திமா ஷேக் தனது சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களும் நூலகத்தில் கல்வி கற்க வைத்து, இந்திய சாதி அமைப்பின் கொடுமையில் இருந்து விடுவிக்க வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். சத்யசோதக் இயக்கத்தில் ஈடுபட்டவர்களை அவமானப்படுத்த முயன்ற ஆதிக்க வர்க்கத்தினரிடமிருந்து பெரும் எதிர்ப்பை அவர் சந்தித்தார், ஆனால் ஷேக்கும் அவருடன் இயங்கிய புலேவும் விடாமுயற்சியுடன் தங்கள் வேலைகளை தொடர்ந்தனர். தலித், தாழ்த்தப்பட்ட, பெண்களுக்கு பயிற்சியளிப்பதன் காரணமாக புலே தம்பதியர் மற்றும் குறிப்பாக சாவித்ரி பாய்க்கும், பாத்திமா ஷேக்கிற்கும் எதிராக நிறைய தடைகள், ஆர்ப்பாட்டங்கள், தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. அவற்றை எதிர்த்து போராடிய சாவித்ரிபாய் ஃபூலே மற்றும் ஜோதிராவ் ஃபூலே ஆகியோர் வரிசையில் மிகவும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு.